ETV Bharat / state

சிறுமியிடம் அத்துமீறிய காவலர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 3:47 PM IST

chief-minister-mk-stalin-talks-about-trichy-mukkombu-child-abuse-issue
பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Tamil Nadu Assembly: திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்தில் சிறுமியிடம் அத்துமீறிய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி முக்கொம்பு விவகாரத்தைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம்.

தமிழக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று (அக்.11) நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மாவட்டம், முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சென்னை- கடந்த 04.10.2023 அன்று மாலை 4-00 மணியளவில், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய சரகம், முக்கொம்பு சுற்றுலாத் தலத்திற்கு ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து பணியில் பணிபுரிந்து வரும் சங்கர் ராஜபாண்டியன் ஆகியோர் அனுமதியோ, விடுப்போ பெறாமலும், உயரதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமலும்,

ஜீயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து, பல நாட்களாகப் பணிக்கு வராமல் இருந்த காவலர் சித்தார்த்தன் என்பவருடன் இணைந்து சென்று, சுற்றுலாத் தலத்திற்கு வருகை தந்திருந்த இளைஞர் மற்றும் 17 வயது பெண்ணை மிரட்டி, அந்த இளைஞரைத் தாக்கி விரட்டி அனுப்பிவிட்டு, உடனிருந்த பெண்ணை அந்தக் காவலர்கள் தாங்கள் வந்திருந்த தனியார் காரில் ஏற்றி, அவரிடம் தவறான முறையில் நடந்திருக்கிறார்கள். பின்னர், அந்தப் பெண் கூச்சல் எழுப்பியதால் அவரைக் காரிலிருந்து இறக்கிவிட்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து அந்தப் பெண் மற்றும் அவருடன் வந்த இளைஞர் இருவரும் முக்கொம்பு புறக்காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்ததின் பேரில், அங்கு பணியிலிருந்த காவல் துறையினர் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று, அந்தக் காவலர்களை விசாரித்தபோது, அவர்கள் முறையாகப் பதிலளிக்கவில்லை.

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசியபோது, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னார்.இதற்குப் பதிலளித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது: "கடந்த 04.10.2023 அன்று மாலை சுமார் 4-00 மணியளவில், திருச்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னார். ஆனால் அது உண்மையல்ல. அந்தக் காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், அந்தக் காவல் நிலைய உதவி ஆய்வாளர், உடனடியாக எஸ்.பி.யை தொடர்பு கொண்டு, அவருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் அன்றே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றம் இழைத்த காவலர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கக்கூடிய பிரிவுகளின் கீழ், துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.விரைவில் இதில் விசாரணை முடிக்கப்பட்டு, இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம்; அதிமுகவினர் வெளியேற்றம் - சபாநாயகர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.