ETV Bharat / state

'இந்திய குடிமகன்' என தன்னை அறிவிக்கக் கோரியவரின் மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Jun 5, 2021, 10:45 PM IST

refugee camp
refugee camp

சென்னை: இந்திய குடிமகன் என கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற்ற தன்னை இந்திய குடிமகனாக அங்கீகரித்து சலுகைகள் வழங்கக்கோரி அகதிகள் முகாமில் உள்ளவர் தாக்கல்செய்த மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் இரும்பூதிப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் த. கணேசன் தாக்கல்செய்த மனுவில், "இலங்கை மலையகப் பகுதியில் தேயிலைத் தோட்டப்பணிகளில் ஈடுபடும் இந்திய வம்சாவளி தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இந்திய குடிமகன் என 1982ஆம் ஆண்டு இலங்கை கண்டியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் சார்பில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்த இந்திய குடிமகன் என இந்திய அரசே கடவுச்சீட்டு வழங்கியுள்ள நிலையில், கடந்த 30 ஆண்டுகளாகச் சொந்த நாட்டிலேயே இலங்கை அகதியாக முத்திரை குத்தப்பட்டு முகாமில் தங்கவைத்துள்ளது இயற்கை நீதிக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது என்பதால், என்னை தாயகம் திரும்பிய இந்திய குடிமகனாக அங்கீகரித்து சலுகைகளை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. பார்த்திபன், மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.