ETV Bharat / state

எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் : போலீஸ் ராஜ்ஜியம் திரும்புவதை அனுமதிக்கூடாது - நீதிமன்றம்!

author img

By

Published : Oct 2, 2020, 6:12 PM IST

காவல்துறை துணை ஆணையருக்கு எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் அதிகாரம் கொடுப்பது தொடர்ந்தால் போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் :  போலீஸ் ராஜ்ஜியம் திரும்புவதை அனுமதிக்கூடாது - நீதிமன்றம்!
எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் : போலீஸ் ராஜ்ஜியம் திரும்புவதை அனுமதிக்கூடாது - நீதிமன்றம்!

சென்னை : காவல்துறை துணை ஆணையருக்கு எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் அதிகாரம் கொடுப்பது தொடர்ந்தால் போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த தேவி என்பவர் எதிர்காலத்தில் இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என இரு நபர் உத்தரவாதத்துடன் பிணைப்பத்திரம் எழுதிக் கொடுத்து, கடந்த டிசம்பர் 16ஆம் தேதி பிணையில் வெளியே வந்துள்ளார்.

வெளியே வந்த ஒருவாரத்திற்குள் டிசம்பர் 21ஆம் தேதியன்று கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்தனர். பிணைப்பத்திரத்தில் அளித்த உத்தரவாதத்தை மீறியதாகக் கூறி தேவியை ஒராண்டு சிறையில் அடைக்க நிர்வாகத்துறை நடுவர் அந்தஸ்திலுள்ள காவல்துறை துணை ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக இன்று(அக்.2) வந்தது. மனுவை ஆராய்ந்த நீதிபதி, " கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக நலனுக்காக காவல்துறையினருக்கு எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் எனும் நீதித்துறை அதிகாரத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது. அந்த அதிகாரத்தின் கீழ் தான் மகாத்மா காந்தி, வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா போன்ற சுதந்திர போராட்டத் தியாகிகள் தண்டிக்கப்பட்டனர்.

நாட்டின் விடுதலைக்குப் பின் நிர்வாகம் மற்றும் நீதித்துறை அதிகாரங்களை பிரிக்கும் வகையில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 50ஆவது பிரிவு உருவாக்கினார். அதனடிப்படையில் அந்த அதிகாரங்களை திரும்பப்பெற அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் ராஜாஜி ஓர் அரசாணை பிறப்பித்தார்.

இந்த அரசாணை காவல்துறையினருக்கு எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் அதிகாரம் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் காவல் துணை ஆணையராக இருப்பவரை எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்டாக நியமித்து பிறப்பிக்கப்பட்ட இரு அரசாணைகள் சட்டத்திற்கு புறம்பாக கொண்டு வரப்பட்டுள்ளன.

குறிப்பாக, மூதறிஞர் ராஜாஜி கொண்டுவந்த அரசாணைக்கு விரோதமானது. துணை ஆணையருக்கு எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் அதிகாரம் கொடுப்பதை தொடர்ந்து அனுமதித்தால், வரலாறு மீண்டும் திரும்பும். இந்தியா போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடக்கூடாது. எனவே, மாவட்ட காவல்துறை சட்டப்படி, காவல்துறையினருக்கு நீதித்துறை அதிகாரம் வழங்கக்கூடாது என அரசாணையில் கூறப்பட்டுள்ளதால், தேவியை சிறையில் அடைத்த எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்கிறேன்.

அத்துடன், அதிகாரப் பகிர்வு திட்டத்திற்கு முரணாக, கடந்த 2013ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் உள்ளதா என்பதை ஆராய வேண்டியுள்ளதால், தனி அமர்வை அமைத்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன்" என கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.