ETV Bharat / state

அமைச்சர் தங்கம் தென்னரசு தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சந்திப்பு!

author img

By

Published : May 6, 2022, 10:49 PM IST

Updated : May 7, 2022, 5:32 PM IST

கீழடி, அமர்நாத் ராமகிருஷ்ணன்,அமைச்சர் தங்கம் தென்னரசு
அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு நிறைவு பெற உள்ள நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்திய தொல்லியல் துறையின் மூத்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மதுரை: வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு நிறைவு பெற உள்ள நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்திய தொல்லியல் துறையின் மூத்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கீழடியில் 8-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகை, அகரம் ஆகியப் பகுதிகளில் 2ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கீழடி, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்ற அகழாய்வுப் பணிகள் செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெற உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையிலுள்ள இந்திய தொல்லியல்துறையின் அலுவலகத்தில் மூத்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கீழடி, அமர்நாத் ராமகிருஷ்ணன்,அமைச்சர் தங்கம் தென்னரசு
மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு.
இதுகுறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசியபோது, 'தமிழ்நாடு சட்டசபை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் அமைந்த எங்கள் அலுவலகத்திற்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு வருகைதந்தார். அவரது வருகை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. கீழடியில் முதல் 2 கட்டங்களாக நான் மேற்கொண்ட ஆய்வுக்கான அறிக்கை தயாரிப்புப் பணியைப் பார்வையிட்டு, பல்வேறு சந்தேகங்களை கேட்டறிந்தார். அடுத்த நான்கு மாதங்களுக்குள் நிறைவடைய உள்ள இந்த அறிக்கையின் சாராம்சங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். மேலும் தற்போது கீழடியில் நடைபெறும் ஆய்வுகள் குறித்தும், அதனைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அறிந்து கொண்டார்.

”கீழடியில் 10 ஆண்டுகள் ஆய்வு செய்யலாம்:” கீழடி உள்ளிட்ட தமிழ்நாடு தொல்லியல் முதன்மைக்குரிய இடங்களை ஆய்வு செய்வதில் தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வமுடன் செயல்படுவது எங்களைப் போன்ற ஆய்வாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

கீழடியைப் பொறுத்தவரை 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ள தொல்லியல் முதன்மைக்குரிய இடமாகும். மத்திய தொல்லியல் துறை மேற்கொள்ளும் ஆய்வு முறைகளை, இங்கு பயன்படுத்தினால், துல்லியமான விவரங்கள் கிடைக்கும் என்பதை அவரிடம் விரிவாக எடுத்துக் கூறினேன். அவற்றைக் கவனமாக கேட்டுக் கொண்டார்’’ என்றார்.

கீழடி அகழாய்வில் தமிழ்நாடு தொல்லியல் துறைக்காக தாங்கள் பணியாற்ற ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்ட கேள்விக்கு, ’’அப்படி இதுவரை எந்த விதமான தகவல்களும் இல்லை. அது குறித்து அமைச்சர் ஏதும் என்னிடம் பேசவில்லை’’ என்றார்.

இந்திய தொல்லியல்துறையின் மூத்த தொல்லியல் கண்காணிப்பாளராக சென்னை வட்டத்தில் பணியாற்றி வருபவர், அமர்நாத் ராமகிருஷ்ணன். வைகை நதிக்கரை நாகரிகத்திற்கான ஆய்வின் அடிப்படையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டு கீழடியைத் தேர்வு செய்தவர். மேலும் இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் கண்காணிப்பாளராக அங்கு கடந்த 2015ஆம் ஆண்டு வரை இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புகைப்பிடிக்காதீர்கள்... சிகரெட்டால் விழிப்புணர்வு ஓவியம்

Last Updated :May 7, 2022, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.