ETV Bharat / state

அனில் அகர்வாலை கொலை குற்றவாளியாக அறிவித்து உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

author img

By

Published : Aug 19, 2020, 5:31 PM IST

திருவாரூர் : ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் உரிமையாளர் அனில் அகர்வாலை இந்தியாவில் நடமாட தடை விதிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

அனில் அகர்வாலை கொலை குற்றவாளியாக அறிவித்து உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்
அனில் அகர்வாலை கொலை குற்றவாளியாக அறிவித்து உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசிற்கு காணொலி பதிவொன்றின் மூலமாக அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "தூத்துக்குடி நாசக்கார தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை சரியானதே என உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வரவேற்கிறோம்.

தீர்ப்பை பெற்றுத் தந்த தமிழ்நாடு அரசுக்கும், துணை புரிந்த அனைத்து அமைப்புகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மிகப் பெரும் மனித அழிவை ஏற்படுத்தி வந்த நாசக்கார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூட்டில் வீர மரணமடைந்த 13 தியாகிகளின் தியாகத்திற்கும், தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டத்திற்கும் கிடைத்த நீதி ஆகும்.

ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுவெளிபாட்டால் பல நூறு மனித உயிர்கள் புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய்களின் தாக்குதல்களால் பலியாகியுள்ளனர். பல ஆண்டுகாலம் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நிம்மதி இழந்து, தங்களது தலைமுறையினரின் உயிர்காக்க போராடி வந்துள்ளனர்.

இவையெல்லாம் மக்களின் ஒன்றுப்பட்ட உச்சக்கட்ட போராட்டத்திற்குப் பிறகு தான் பேரழிவு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடக்கத்தில் ஆட்சியாளர்கள் உணர மறுத்தாலும், இறுதியில் அரசு உறுதியோடு சட்ட நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் நீதி வென்றுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இனியும் காலம் கடத்தாமல் பேரழிவிற்கும், மனித அழிவிற்கும், பெரும் துயரத்திற்கும் காரணமான வேதாந்தா நிறுவனத்தின் நாசக்கார ஸ்டெர்லைட் தாமிர ஆலை உரிமையாளர் அனில் அகர்வாலை கொலை குற்றவாளியாக அறிவித்து, தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் நடமாட தடை விதித்து உரிய தண்டனை பெற்று தர வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக அப்புறப்படுத்தி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். இனி இந்திய மண்ணில் வேதாந்தா நிறுவனத்திற்கு எந்தவொரு தொழில் நடத்தவும் அனுமதி வழங்கக்கூடாது என, நாடாளுமன்றம் மூலம் தடை விதிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து விரட்டியடிக்க முன்வர வேண்டும்" என வலியுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.