ETV Bharat / state

’மனைவி, மகளை பிரிஞ்சி இருக்க முடில’ - வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்!

author img

By

Published : Aug 27, 2020, 4:06 PM IST

workshop-owner-committed-suicide-due-to-family-problem
workshop-owner-committed-suicide-due-to-family-problem

திருப்பூர்: மனைவி, மகள் பிரிந்து சென்றதால் விரக்தியில் கணவர் மரண வாக்குமூலத்தை வீடியோ பதிவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜி.என்.பாலன்நகரை சேர்ந்தவர்கள் ரவி (44) - கனகவள்ளி (35). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர். புதிய பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ ஒர்க் ஷாப் நடத்தி வந்த இவர், ஆகஸ்ட் 3ஆம் தேதி மனைவி கனகவள்ளி மற்றும் மகள் ஆகியோர் காணாமல் போனதாக அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இருவரும் ஈரோடு பெரியார்நகரில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கனகவள்ளி ரவியுடன் செல்ல மறுத்ததுடன், அவருடைய தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால் கனகவள்ளி மற்றும் அவருடைய மகள் மீண்டும் அதே மகளிர் விடுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த ரவி, கடந்த 24ஆம் தேதி காலை அங்கு சென்று தன்னுடன் வருமாறு இருவரிடமும் கெஞ்சினார். ஆனால் அவர்கள் ரவியுடன் வர மறுத்ததால் மனமுடைந்த ரவி, அங்கிருந்து வீட்டிற்கு திரும்பினார்.

பின்னர் வீட்டில் தனியாக இருந்த ரவி, விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் அவர் வீட்டிற்கு சென்ற உறவினர்கள் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, ரவி உள்ளே தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து உடனடியாக அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றபோது, பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ரவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருடைய செல்போனில் மரண வாக்குமூலமாக பேசி பதிவு செய்த வீடியோவை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பினார். அந்த வீடியோ கடந்த இரண்டு நாள்களாக வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வீடியோவில் ரவி, ''எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க. இறுதி மரண வாக்குமூலம் இது. என் மனைவியையும், குழந்தையையும் பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை. அதனால்தான் தொடர்ந்து அவர்களை பார்த்து வந்தேன். ஆனா எனது மனைவியும், குழந்தையும் என்னை கேவலப்படுத்திட்டாங்க. அவங்க நல்லா இருக்கனும்னு நல்ல எண்ணத்துலதான் கடைசியா கூட பார்க்க போனேன். ஆனா அப்போதும் என்னையும், என்னுடைய தாயையும் கொச்சைப்படுத்தி பேசிட்டாங்க.

அவங்க கெட்டுப்போறத என்னால சகிக்க முடியல. நான் உயிரோட இருந்து அவங்க கெட்டுப்போறத பார்க்கறத விட, அதுக்கு முன்னாடியே செத்து போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். இது என்னோட மரண வாக்குமூலம். ஈரோடு சூரம்பட்டியில் இருக்கும் அருண்குமார், அவருடைய அம்மா, கோழிக்கடைகாரர், கம்பெனி ஓனர் அனைவரும் தான் இதற்கு காரணம். அவங்கதான் என்னோட மனைவி, மகளை மூளைச்சலவை செய்து என்னிடம் இருந்து பிரிச்சிட்டாங்க. என்னோட குடும்பம் என்கிற குருவி கூட்ட பிரிச்சிட்டாங்க. என் சாவுக்கு காரணம் அந்த 4 பேரும்தான். எனக்கு இதுவரை உதவியா இருந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்படியாவது எனது மனைவியையும், குழந்தையையும் அந்த 4 பேரிடம் இருந்து பிரித்து, இருவருக்கும் நல்ல புத்தி சொல்லி, திருப்பூருக்கு அழைத்து வந்து தாயிடம் ஒப்படைக்க வேண்டும். திரும்பவும் ஈரோடு போகாமல் பாத்துக்கனும்'' என அந்த வீடியோவில் ரவி பேசியுள்ளார்.

வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட ரவி

இதேபோல் ரவி அவருடைய மனைவியுடன் செல்போனில் பேசியபோது, ரவியை கனகவள்ளி தரக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோவும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாகவும், ரவி மரண வாக்குமூலம் வெளியிட்ட வீடியோ மற்றும் அவருடைய சாவுக்கு காரணம் என்று கூறப்படும் ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த 4 பேர் குறித்தும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் திருட்டுப் பொருள்களுடன் தங்கியிருந்த நபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.