ETV Bharat / state

மாணவிகள் வேட்டி அணிந்து கொண்டாடிய பொங்கல் விழா.. திருப்பூரில் உற்சாகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 4:23 PM IST

திருப்பூர் கல்லூரிகளில் களைகட்டிய பொங்கல் விழா
திருப்பூர் கல்லூரிகளில் களைகட்டிய பொங்கல் விழா

Trippur college pongal celebration: பொங்கல் விழா கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருப்பூர் கல்லூரி மாணவிகள் வித்தியாசமாக வேட்டி அணிந்து ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் கொண்டாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

திருப்பூர் கல்லூரிகளில் களைகட்டிய பொங்கல் விழா

திருப்பூர்: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வருகின்ற 15 தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், திருப்பூரில் இயங்கி வரும் ஏ.வி.பி கல்லூரியில் இன்று (ஜன.12) பொங்கல் விழா நடைபெற்றது. மாணவிகள் வேட்டி அணிந்து பொங்கலைக் கொண்டாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

கல்லூரி மாணவிகள் பாரம்பரிய முறைப்படி மாவிளக்கு, முளைப்பாரி எடுத்துப் பொங்கல் வைத்துக் கொண்டாடினார்கள். இதில் ஏராளமான மாணவிகள் சேலை அணிந்து வந்து உற்சாகமாகப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள். வழக்கமாக மாணவிகள் சேலை அணிந்து வந்து பொங்கல் கொண்டாடும் நிலையில் கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவிகள், வேஷ்டி அணிந்து வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள்.

பொங்கல் கொண்டாட்டம் குறித்து கல்லூரி மாணவி கூறுகையில், “பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த மிட்டாய் வகைகள், பாரம்பரிய விளையாட்டுகள், கலை திருவிழா என வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். ஆண்கள் மட்டும் தான் வேட்டிகளைக் கட்ட வேண்டும் என்பது இல்லை. ஆண் பெண் என அனைவரும் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் கொண்டாட வேண்டும்” என தெரிவித்தார்.

இதே போல, திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவிகள் பொங்கல் வைத்துக் குலவையிட்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் கல்லூரியில் படிக்கின்ற 2500 மாணவிகள் பாரம்பரிய சேலை அணிந்து கலந்து கொண்டனர். கல்லூரி மைதானத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் குழுவாகப் பொங்கல் வைத்துக் குலவையிட்டனர்.

பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்த கல்லூரி மாணவிகள் கும்மி ஆட்டம், நாட்டுப்புற நடனம் ஆடி மகிழ்ந்தனர். பல்வேறு நாட்டுப்புறப் பாடல்களுக்கு மாணவிகள் குழு குழுவாக மைதானத்தில் ஆட்டம் பாட்டத்துடன் பரஸ்பரம் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

இதையும் படிங்க: வேலப்பன்சாவடியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா; மாணவர்கள் கோலாகல கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.