ETV Bharat / state

இஸ்லாமியர்கள் குடியிருப்பில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் - திருப்பூரில் பரபரப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 9:33 AM IST

Procession with Jai Shri Ram slogan Banner dispute between BJP and Muslims in Tirupur
இஸ்லாமியர்கள் குடியிருப்பில் ஜெய் ஸ்ரீராம் கோஷம்

Tirupur News: திருப்பூரில் பேனர் வைப்பதில் பாஜக மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில், பாஜகவினர் பேனரை தூக்கி கொண்டு இஸ்லாமியர்கள் குடியிருப்பிற்குள் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்ட படி ஊர்வலமாக சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இஸ்லாமியர்கள் குடியிருப்பில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்டு ஊர்வலம் சென்றதால் பரபரப்பு

திருப்பூர்: கடந்த சில நாட்கள் முன்பு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மதுரையில் நடைபெறும் மாநாடு தொடர்பாக உஷா தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் பேனர் வைக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்ட பேனரை அகற்றும் படி, போலீசார் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எஸ்.டி.பி.ஐ பேனர் அகற்றப்பட்ட நிலையில், அந்த குறிப்பிட்ட இடத்தில் பாஜக சார்பில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்த பேனர் வைக்கப்பட்டது.

இதை கண்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பாஜக பேனரை அகற்ற வேண்டும் என நேற்று (ஜன.2) திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பேனரை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து மீண்டும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அங்கு பேனரை வைத்துள்ளனர். இந்நிலையில் தங்களது பேனர் அகற்றியதை கண்டித்து பாஜகவினர் மற்றொரு பேனர் உடன் சிடிசி கார்னர் வரை பேரணியாக சென்றனர்.

இதையும் படிங்க: 'ஆர்எஸ்எஸ் சேவகன் என்பதில் எனக்கு பெருமை' - நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

அப்போது, பாஜகவினர் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்துடன் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியை நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது போலீஸ் துணை கமிஷனர் வனிதா தலைமையிலான போலீசார் பாஜகவினரை தடுத்து நிறுத்தினார். அப்போது போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து பாஜகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் வைத்திருந்த பேனரை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். மேலும், உஷா தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் வைத்திருந்த பேனரையும் அகற்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக, நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்தப் பேனரும் அகற்றப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், 'இரண்டு தரப்பினருக்கும் பேனர் வைக்க அனுமதி வழங்கவில்லை. மேலும், இந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 3 நாள் ஆசிரியர் வேலை 4 நாள் கூலி வேலை... தவிக்கும் பகுதி நேர ஆசிரியர்கள் - அரசின் நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.