ETV Bharat / state

வேலம்பட்டி சுங்கச்சாவடியை மீண்டும் திறக்க முயற்சி? பொதுமக்கள் கடும் எதிர்ப்பு.. பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 10:46 PM IST

Updated : Dec 6, 2023, 11:06 PM IST

Velampatti Toll Gate
வேலம்பட்டி சுங்கச்சாவடிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

Velampatti Toll Gate: அவிநாசி - அவிநாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடியை தேசிய நெடுஞ்சாலைத்துறை மீண்டும் திறப்பதற்கு முயற்சி செய்து, சுங்கக்கட்டணம் வசூலிக்க முனைப்புக் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வேலம்பட்டி சுங்கச்சாவடிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

திருப்பூர்: திருப்பூரில் இருந்து அவிநாசிபாளையம் வழியாக தாராபுரம் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலை எண் - 381 மிக முக்கிய சாலையாகப் பயன்படுகிறது. தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்ல பொதுமக்கள் இந்த சாலையினைப் பயன்படுத்துகின்றனர்.

விவசாயிகளின் பயன்பாடு: திருப்பூர் மாவட்டத்தின் மாநகர் அல்லாத பகுதிகளான தாராபுரம், காங்கயம், பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் திருப்பூருக்கு கொண்டுச் சென்று சந்தைகளில் விற்று வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை: அவிநாசியில் இருந்து திருப்பூர் மாநகரின் மையப்பகுதி வழியாகச் சென்று தாராபுரம் சாலையில் உள்ள அவிநாசிபாளையம் வரையிலான 31 கி.மீ தூரத்தை தேசிய நெடுஞ்சாலையாக (தேசிய நெடுஞ்சாலை எண்: 381) அறிவித்து, கடந்த 2017 ஆம் ஆண்டு ரூ.178 கோடி மதிப்பில் இந்த சாலை மேம்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட அவிநாசி - அவிநாசிபாளையம் சாலையில் வேலம்பட்டி என்கிற இடத்தில் சுங்கச்சாவடி ஒன்றை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைத்து உள்ளது. இந்த சுங்கச்சாவடி கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர விடாமல் பொதுமக்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி தடுத்து உள்ளனர். இந்த சாலை வேலம்பட்டிக் குளத்தினை ஆக்கிரமிப்புச் செய்து அமைத்திருப்பதாகவும், இதனால் விவசாயிகளின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜி.பி.எஸ்.கிருஷ்ணசாமி கூறுகையில், "வடக்கு அவிநாசிபாளையம் வேலம்பட்டிக் கிராமத்தில் 4 ஏக்கர் 36 சென்ட் பூமியானது குளமாக இருந்தது. இந்த குளத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு மூடி சுங்கச்சாவடியும், சுங்கச்சாவடி அலுவலகங்களும் அமைக்கப்பட்டன. அப்போது பகுதி மக்களால் குளத்தை மூடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து ஆய்வு செய்து அந்த இடம் முழுவதும் நீரோடையில் இருக்கிறது என்பதால் குளத்திற்குள் சுங்கச்சாவடி கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் குறியாக இருந்து வருகிறது. இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆக்கிரமிப்பை அகற்றாமல் கட்டணம் வசூல் செய்தால், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ரத்னா ஜெ.மனோகர் கூறுகையில், "அவிநாசி - அவிநாசிபாளையம் சாலை திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையானது தேசிய நெடுஞ்சாலைக்குரிய தகுதி இல்லாமல் மிக தரமற்ற நிலையில், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலைகளை அகலப்படுத்தாமல் ஏற்கனவே, இருந்த நகராட்சியால் போடப்பட்ட சாலை மீது மேற்கொண்டு சாலை போடப்பட்டு தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்து சுங்கச்சாவடி அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் முனைப்பாக இருந்தது தேசிய நெடுஞ்சாலைத்துறை.

இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் பகுதிமக்கள் சார்பாக நடத்தப்பட்டது. மேலும், இந்த சாலையானது போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடிய பகுதியாக உள்ளது. இந்த நெரிசலான சாலையில் ஏற்படும் விபத்துகளும் அதிகம். இதுதவிர, இந்த சாலை வழியாக தான் தாராபுரம், காங்கயம், பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் விளைபொருட்கள் திருப்பூர் மாநகரச் சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த சுங்கச் சாவடியால் விவசாயிகளுக்கு பெரும் சுமை.

எனவே, நெடுஞ்சாலைக்கு தகுதியற்றதாக இருக்கக்கூடிய இந்த சாலையில் சுங்கச்சாவடி அமையக் கூடாது. உடனடியாக மூட வேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலைத்துறை சுங்கச்சாவடியை மீண்டும் திறந்து கட்டணம் வசூலிக்கும் எண்ணத்தில் இருப்பதால் அதற்கு அனுமதிக்கக்கூடாது" என்று கூறினார்.

பொதுமக்களின் குற்றச்சாட்டு: விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களுக்கு நடத்தியும், நீர்நிலைப் புறம்போக்கு நிலத்தில் சுங்கச்சாவடியை அமைத்து அதை செயல்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முனைப்புக் காட்டுவது தவறான முன் உதாரணம்.

நெரிசலான மாநகருக்குள் செல்லும் இந்த சாலை பல இடங்களில் பாதியில் காணாமல் போகிறது. வழிகாட்டும் கோடுகளைக் கூட வளைத்து போட்டு இருக்கிறார்கள். சர்வீஸ் சாலையும் அமைக்கப்படவில்லை. இவ்வாறு இருக்கையில், இந்த சாலையில் சுங்கச்சாவடி வசூல் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு.. பள்ளிக்கரணையில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்!

Last Updated :Dec 6, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.