ETV Bharat / state

கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் - மாசடையும் நொய்யல் ஆறு

author img

By

Published : Dec 24, 2020, 6:12 PM IST

Updated : Dec 27, 2020, 2:54 PM IST

நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவு நீர்
நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவு நீர்

பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதில் திருப்பூர் மாநகராட்சி சுணக்கம் காட்டுவதால், நொய்யல் ஆறு, குளங்களில் சாக்கடை நீர் கலக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர்: பின்னலாடை நகரம் என அழைக்கப்படும் திருப்பூர் கடந்த 2009ஆம் ஆண்டு கோவை மாவட்டத்திலிருந்து பிரிந்து புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

11 ஆண்டுகளாகியும் திருப்பூர் மாவட்டத்திற்கான உரிய கட்டமைப்பு வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.

கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் -

மாநகரப் பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் சாக்கடை வசதி என எந்த அடிப்படை வசதிகளும் முறையாக நிறைவேற்றப் படவில்லை என்ற குற்றச்சாட்டு பொது மக்களிடையே இருந்து வருகிறது.

திருப்பூரிலுள்ள 60 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. மூன்று கட்டங்களாக இந்த திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் மதிப்பில் 150 கிலோ மீட்டர் தொலைவுக்கும், இரண்டாம் கட்டமாக 40 கோடி ரூபாய் மதிப்பில் 110 கிலோ மீட்டர் தொலைவுக்கும் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தற்போது மூன்றாவது கட்டமாக 130 கோடி மதிப்பில் 180 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த பணிகள் தற்போது வரை முடிவு பெறவில்லை.

மாவட்டத்தின் குமார் நகர், காலேஜ் ரோடு, ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாளசாக்கடை பணிகள் மந்தமான நிலையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் பாதள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

இதனால் வாகனங்கள் செல்வதற்கு மட்டுமல்லாது, பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் அருகே உள்ள பெரியாயி பாளையத்தில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு 30 எம்எல்டி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய முடியும். ஆனால் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவடையாமல் இருப்பதால் சாக்கடை கழிவுகளை சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கழிவு நீர் நொய்யல் ஆறு மற்றும் மாநகராட்சியைச் சுற்றியுள்ள குளம், குட்டைகளில் கலக்கும் அவலம் நிலவுகிறது. இதனால் நொய்யலாறு, குளம், குட்டை ஆகியவை மாசடைவதோடு மட்டுமல்லாது நிலத்தடி நீரும் பாழாகிறது.

எனவே பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்து கழிவுநீர் ஆறு, ஓடைகளில் கலக்காமல் நடவடிக்கை எடுத்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து முறையாக வெளியேற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மூர்த்தி, “பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன” என்று குற்றம்சாட்டினார். எனவே பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய மாநகராட்சி அலுவலர்கள், "திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பூமிக்கு அடியில் குழாய் அமைத்து கழிவு நீரை கொண்டு செல்லும் இந்த திட்டத்தால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக அப்புறப்படுத்தப்படும்.

மேலும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம் திருப்பூர் பெரியாயிபாளையத்தில் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி நான்கு இடங்களில் கழிவு நீர் உந்து நிலையமும், ஏழு இடங்களில் கழிவுநீர் ஏற்று நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

120 கிலோ மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் சேகரிப்பு குழாய், 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் உந்து குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 4 ஆயிரத்து 442 ஆள் இறங்கும் குழிகள், 15 ஆயிரத்து 500 வீட்டு இணைப்புகளும் பயன்பாட்டில் உள்ளன. அதுமட்டுமின்றி தற்போது அம்ரூத் திட்டத்தில் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு விடுபட்ட பகுதிகள் மற்றும் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் 37 கிலோ மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் பிரதான குழாய்களும், 564 கிலோமீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் சேகரிப்பு குழாய்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பத்து இடங்களில் கழிவுநீர் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே பெரியாயிபாளையம் பகுதியில், 43 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 36 எம்எல்டி திறன்கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாக்கடை கால்வாய் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முறையான வகையில் சுத்திகரிப்பு செய்து அதிலிருந்து வெளியேறும் நீர் நொய்யல் ஆற்றில் விட ஏற்பாடு செய்யப்படும்" எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அம்மாவட்ட தொழிட்சங்க செயலாளர் சேகர் கூறுகையில், “இதுபோன்ற கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலப்பதால், ஆறுகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன” என்று குற்றம்சாட்டினார்.

இந்த அவலநிலையை போக்க மாநகராட்சி அலுவலர்கள் சுணக்கம் காட்டாமல் விரைந்து திட்டப் பணிகளை முடிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கண்ணுக்கு எட்டியவரை நெரிசல்! காதுகளை கிழிக்கும் இரைச்சல்!

Last Updated :Dec 27, 2020, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.