ETV Bharat / state

பலத்தக் காற்றால் இடிந்து விழுந்த கோழிப்பண்ணை கட்டடம்!

author img

By

Published : May 27, 2020, 9:03 PM IST

Updated : May 27, 2020, 10:20 PM IST

இடிந்து விழுந்த கோழிப்பண்ணை
இடிந்து விழுந்த கோழிப்பண்ணை

திருப்பூர்: தொப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் நேற்று (மே 26) பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் கோழிப்பண்ணை கட்டடம் இடிந்து விழுந்தது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ரங்கபாளையம், காளியப்ப கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் தனது தோட்டத்தில் மூன்று கோழிப்பண்ணைகள் அமைத்திருந்தனர். ஒவ்வொரு கோழிப்பண்ணையிலும் தலா ஐந்தாயிரம் நாட்டுக் கோழிகளை வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று (மே 26) இரவு அந்தப் பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது பெரும் சூறாவளி காற்று வீசியதில் கோழிகள் நனைந்து விடக்கூடாது என்பதற்காக, காளியப்பனும் அவரது தொழிலாளர்களும், பண்ணைக்குள் சென்று, பக்கவாட்டு பகுதிகளில் தார்ப்பாய்களைக் கட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது காற்றின் வேகத்தில் பண்ணைக்கு அருகே இருந்த பெரிய மரங்கள் அதிக சத்தத்துடன் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் அப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதைக்கண்டு கந்தசாமியும், மற்றவர்களும் கோழிப்பண்ணையை விட்டு வெளியே ஓடி சென்றனர். அவர்கள் வெளியே வந்த சிறிது நேரத்தில் இரண்டு கோழிப்பண்ணைகள் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. அப்போது இடிபாடுகளில் சிக்கி சுமார் 3,500 கோழிகள் இறந்து போய்விட்டன.

இடிந்து விழுந்த கோழிப்பண்ணை
இடிந்து விழுந்த கோழிப்பண்ணை

இதுகுறித்து கோழிப்பண்ணை உரிமையாளர் கந்தசாமி என்பவர் கூறுகையில், “சுமார் ரூ.13 லட்சம் செலவில் 130 அடி நீளம், 14 அடி அகலத்தில் இரண்டு கோழிப்பண்ணைகளை அமைத்திருந்தோம். கோழிப்பண்ணையின் மேற்கூரை ஓடுகளால் மூடப்பட்டிருந்தன. ஒவ்வொரு பண்ணையிலும் ஐந்தாயிரம் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. கோழிகள் அனைத்தும் 70 நாள்கள் வரை வளர்க்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு கோழியும் சுமார் 1½ கிலோ எடை வரை இருக்கும். இன்னும் 10 நாள்களில் கோழி அனைத்தையும் விற்பனைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில், சூறாவளி காற்றில் சிக்கி கோழிப்பண்ணையின் சுவர் இடிந்து விழுந்ததில் சுமார் ரூ.20 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா கிராமங்களை தாக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்!

Last Updated :May 27, 2020, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.