தங்கையை காதலித்த இளைஞரை கொலை செய்த அண்ணன்.. திருப்பத்தூரில் நடந்த கொடூரம்!

தங்கையை காதலித்த இளைஞரை கொலை செய்த அண்ணன்.. திருப்பத்தூரில் நடந்த கொடூரம்!
Youth killed in Vaniyambadi: வாணியம்பாடி அருகே 17 வயது சிறுமியை காதலித்து வந்த இளைஞரை, சிறுமியின் சகோதரர் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, ஜமான் கொள்ளை பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அது குறித்து அச்சிறுமியின் சகோதரர் சந்தோஷ் என்பவர், தனது தங்கை மற்றும் முரளி பேசுவதை தவிர்க்கும்படி பலமுறை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அதனைக் கண்டுகொள்ளாத முரளி மற்றும் அச்சிறுமி தொடர்ந்து பேசி வந்ததாகவும், இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இது குறித்து அச்சிறுமியின் தந்தை அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில், முரளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர், அந்த 17 வயது சிறுமியை அவருடைய பெற்றோருடன் காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும், முரளி அச்சிறுமியிடம் தொடர்ந்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அச்சிறுமியின் சகோதரர் சந்தோஷ், ஆத்திரத்தில் தும்பேரி பகுதியில் இருந்த முரளியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் காவல் துறையினர், முரளியின் உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கொலை செய்த சந்தோஷை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தன் தங்கையை காதலித்து வந்த இளைஞரை, சகோதரர் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
