ETV Bharat / state

கிராம நிர்வாக அலுவலரிடம் ரூ.7 லட்சம் பணம் மோசடி.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 6:58 PM IST

கிராம நிர்வாக அலுவலரிடம் பணமோசடியில் ஈடுபட்ட நபர்
கிராம நிர்வாக அலுவலரிடம் பணமோசடியில் ஈடுபட்ட நபர்

திருப்பத்தூரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது மனைவி இருவரிடமும் பணமோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்து பணத்தை மீட்டுத்தர கிராம நிர்வாக அலுவலர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த சாமநகர் பகுதியில் அரவிந்தன்(47) என்பவரும் அவருடைய மனைவி பிரியாவும்(32) வசித்து வருகின்றனர். அரவிந்தன் கூடப்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக கடந்த 2017 முதல் 2020ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கூடப்பட்டு - காக்கண்ணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த (லேட்) மகாதேவன் மகன் சுரேஷ்(30), கூடப்பட்டு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அவரது மனைவி அருணா என்பவரது பெயரில் கணினி மையம் நடத்தி வந்தார்.

இதன் காரணமாக கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தனுக்கும் சுரேஷ்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சுரேஷ் அவரது தந்தை இறந்துவிட்டதாகவும், அதனால் மிகவும் கஷ்டப்பட்டு வருவதானால், கோச் பஸ் எடுத்து கொடுத்தால் டிரைவராக பணியாற்றி பிழைத்துக் கொள்வேன் எனக் அரவிந்தனிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அரவிந்தனும் அவருடைய மனைவி பிரியாவின் பெயரில் கோச் பஸ் எடுக்க முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, திருப்பத்தூரில் செகண்ட்ஸில் கோச் பஸ் இருப்பதனை அறிந்து, அதனை வாங்க முடிவு செய்யப்பட்டதையடுத்து சோழா தனியார் நிதி நிறுவனத்தில் லோன் தருவதாக அரவிந்தனிடம் சுரேஷ் கூறியுள்ளார். அவரை நம்பி திருப்பத்தூர் பெடரல் வங்கி கிளையில் அரவிந்தன் அவரது மனைவி பிரியா பெயரில் புதிய வங்கி கணக்கினை தொடங்கிட முடிவு செய்தார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வங்கி கணக்கு தொடங்கிட உதவி செய்வதாகக் கூறி அன்று பெடரல் வங்கியில் சுரேஷ் என்பவர் பிரியாவின் பெயரில் உள்ள காசோலை புத்தகம் ஒன்றினை வாங்கியுள்ளார்.

அப்போது கணக்கு தொடங்குவது தொடர்பாக வங்கி மேலாளர் கேட்கிறார் எனக் கூறி இரண்டு காசோலை ரசீதுகளை எடுத்துக்கொண்டு, அதில் முதல் காசோலை ரசீதிலிருந்து, அப்போதே வங்கிகணக்கு தொடங்கிட ஆயிரம் ரூபாய் பயன்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இரண்டாவது காசோலையை மறைத்து வைத்துக் கொண்டு அவருடைய மனைவி அருணா என்பவர் பெயரில் கடந்த 23.02.2023 ஆம் தேதி மோசடியில் ஈடுபட்டு 6லட்சத்து 75ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார்.

ஆனால் அதுவரை அவரது மனைவி பெயரில் இருந்த வங்கி கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து தெரியாமல் இருந்த கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தன், இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது குழந்தைகளுக்கு இன்சூரன்ஸ் பாலிசி தொகை செலுத்துவது தொடர்பாக வங்கிக்குச் சென்று வங்கி இருப்பு கணக்கினை பார்த்தப்போது பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் சுரேஷ் மற்றும் அருணா ஆகியோர் தான் பணமோசடியில் ஈடுபட்டிருப்பதை உறுதிபடுத்திய அரவிந்தன் மற்றும் அவரது மனைவி இதுகுறித்து கடந்த டிச.22 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுரேஷ் - அருணா மீது நடவடிக்கை எடுக்கவும் பணத்தை மீட்டு தரக்கோரியும் புகார் அளித்தனர்.

இந்நிலையில் அரவிந்தன் அளிக்கப்பட்டப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அருணா என்பவர் காக்கணம்பாளையம் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிராம நிர்வாக அலுவலரையே ஏமாற்றி காசோலை மூலமாக பணத்தை எடுத்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் 3500 வீடுகள், 175 சாலைகள் சேதம்; ஆய்வுக்கு பிறகு தலைமைச் செயலாளர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.