ETV Bharat / state

திருப்பத்தூரில் முதல் கரோனா உயிரிழப்பு - பரிசோதனையின்போதே மயங்கி விழுந்து இறந்த முதியவர்

author img

By

Published : Jul 7, 2020, 9:30 AM IST

Thirupathur First corona dead
Thirupathur First corona dead

திருப்பத்தூர் : கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 73 வயது முதியவர் பரிசோதனை நடந்து கொண்டிருக்கும்போதே உயிரிழந்தார். இது மாவட்டத்தின் முதல் கரோனா உயிரிழப்பாகும்.

கரோனா தொற்றின் தாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் அதிரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மொத்தம் 363 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 1830 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருப்பத்தூரை அடுத்த கொரட்டி கிராமத்தை சேர்ந்த 73 வயது மதிக்கத்தக்க கோயில் அர்ச்சகர் ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார்.

குப்புசாமி எனும் இந்நபர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாதாந்திர சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் குப்புசாமி அடுக்கம்பாறை மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு பின்னர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சுகாதாரத்துறை அலுவலர்கள் குப்புசாமியின் வீட்டிற்கு சென்று, வீட்டிலுள்ள அனைவரையும் சிகிச்சைக்குட்படுத்த திருப்பத்தூரை அடுத்துள்ள குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு குப்புசாமியின் சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போதே திடீரென அவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போதே முதியவர் உயிரிழந்த சம்பவம் மருத்துவர்கள், செவிலியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வந்த மன அழுத்தத்தால் உயிரிழந்தாரா அல்லது மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தாரா என பல்வேறு கோணங்களில் மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில், முதியவர் உயிரிழந்ததன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் கரோனா இறப்பு பதிவாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.