ETV Bharat / state

குறவர் சமூக மக்களின் 8 நாள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்!

author img

By

Published : Mar 7, 2023, 5:33 PM IST

மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, திருப்பத்தூரில் குறவர் இன மக்களின் 8 நாள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

குறவர் மக்கள் போராட்டம் வாபஸ்
குறவர் மக்கள் போராட்டம் வாபஸ்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தமிழ்ப் பழங்குடி குறவர் சமூக மக்கள், தங்களுக்கு எஸ்.சி குறவர் என்ற பெயரில் சாதிச்சான்று வழங்கக்கோரி, வட்டாட்சியர் அலுவலகம் முன் கடந்த 27-ம் தேதி முதல் போராட்டம் நடத்தினர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புக்கு செல்லாமல் பெற்றோருடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முட்டி போடுதல், காத்திருப்பு, ஒப்பாரி, கண்களில் கருப்பு துணிகளை கட்டுதல், தவளை போல் தவழ்ந்து வருதல் என நூதன முறைகளில், ஒவ்வொரு நாளும் குறவர் சமூக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இப்போராட்டத்துக்கு சில அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

தங்கள் பிரிவில் 50 சதவீதம் பேருக்கு எஸ்.சி குறவர் என்ற பெயரில் சாதிச்சான்று வருவாய்த்துறையினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 50 சதவீதம் பேருக்கு சாதிச்சான்று வழங்கப்படவில்லை எனவும் போராட்டம் நடத்திய மக்கள் குற்றம்சாட்டினர். சாதிச்சான்று வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும், காவல்துறையினர் தங்களை கைது செய்து சிறையில் அடைக்கட்டும் எனவும் ஆவேசத்துடன் கூறினர்.

இந்நிலையில் நேற்று (மார்ச் 6) 8வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து குறவர் இன மக்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். 50 சதவீதம் குறவர் இன மக்களுக்கு சாதிச்சான்று ஏன் வழங்கவில்லை என, அதிகாரிகளிடம் ஆட்சியர் வினவினார்.

அப்போது, "தகுதி இல்லாத நபர்கள் சாதிச்சான்றிதழ் கேட்கின்றனர். போராட்டம் நடத்தி வருவதால் அவர்களிடம் விசாரணை நடத்த முடியவில்லை. போராட்டத்தை கைவிட்டால் தகுதி வாய்ந்த நபர்களுக்கு சாதிச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கானப் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

பின்னர் போராட்டம் நடத்திய மக்கள் மத்தியில் பேசிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், "சாதிச்சான்று கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் அதிகாரிகளுக்கு இல்லை. அதே நேரம் தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டுமே சான்றினை கொடுக்க முடியும். அதற்கு நீங்கள் தான் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்களுக்கு ஓரிரு நாட்களில் சாதிச்சான்று வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்" என கேட்டுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் அடைந்த குறவர் சமூக மக்கள் 8 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் வருவாய்த்துறை அலுவலக வளாகத்தில் இருந்து கலைந்து சென்றனர். தகுதி வாய்ந்தவர்களுக்கு உடனடியாக சாதிச்சான்று வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: நிர்வாகிகள் விலகலால் பாஜகவிற்குப் பாதிப்பு இல்லை - கெத்தாகப் பேசிய வானதி சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.