திருப்பத்தூரில் வாக்குப் பெட்டிகள் உடைப்பு - மறு தேர்தல் நடத்தக்கோரி ஆட்சியரிடம் மனு

author img

By

Published : Oct 11, 2021, 7:56 PM IST

ஆட்சியரிடம் மனு அளித்த டிகே ராஜா

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டு, மாற்றப்பட்டதாகவும், மறு தேர்தல் நடத்தக்கோரியும் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் டி.கே. ராஜா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆறு ஒன்றியங்களில் முதலில் கந்திலி, நாற்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நான்கு ஒன்றியங்களுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், ஆலங்காயம், மாதனூர் ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், ஆலங்காயம் ஒன்றியத்துக்கான தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் பலத்த காவல் பாதுகாப்புடன், ஆலங்காயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் எல்லாம் உடைக்கப்பட்டு முகப்புச்சீட்டுகள் எல்லாம் கிழித்தெறியப்பட்டுள்ளன.

இதனால், அங்கு மீண்டும் தேர்தலை நடத்தவேண்டும் எனக்கூறி, பாமக மாநில துணை பொதுச்செயலாளர் டி.கே. ராஜா தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

மறு தேர்தலை நடத்தக் கோரிக்கை

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே. ராஜா, 'திமுக மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தேவராஜ் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை.

குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றி பெற ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குச்சீட்டுகள் உள்ள பெட்டிகளை எல்லாம் உடைத்துள்ளனர்.

இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். எனவே, நாளைய தினம் நடக்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படவேண்டும். மீண்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும். ஜனநாயகத்துக்கு விரோதமான செயலில் ஈடுபட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜை கைது செய்ய வேண்டும்.

ஆட்சியரிடம் மனு அளித்த டி.கே. ராஜா

இவர்கள் செய்த தவறுக்கு ஆதாரமாக்க வட்டார வளர்ச்சி அலுவலர் தேர்தல் அலுவலர் மூன்று காவலர்கள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, தவறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டபோதே ஊர்ஜிதமாகிய பட்சத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.