ETV Bharat / state

வாணியம்பாடி தோல் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் கேடு; 4 ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை.. பொதுமக்கள் ஆவேசம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 10:56 AM IST

சுற்றுச்சுழலைப் பாதிக்கும் தோல் தொழிற்சாலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
சுற்றுச்சுழலைப் பாதிக்கும் தோல் தொழிற்சாலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

Vaniyambadi leather factory: வாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைக் கண்டித்து, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குழந்தைகளுடன் தொழிற்சாலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுற்றுச்சுழலை பாதிக்கும் தோல் தொழிற்சாலை

திருப்பத்தூர்: வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட காமாராஜபுரம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் தோல் தொழிற்சாலை, கழிவுகளை உரிய முறையில் வெளியேற்றாமல், தொழிற்சாலை வளாகத்திலேயே வைத்திருப்பதாகவும், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் மிகவும் மோசமான நிலையில் வருவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இந்த தோல் தொழிற்சாலைகளில் இயங்கும் இயந்திரங்கள் மூலம் வெளியேறும் புகை துர்நாற்றம் வீசுவதாகவும், அவற்றை சுவாசிப்பதால், அப்பகுதியில் வசிக்கும் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் வாந்தி, மயக்கம், ஆஸ்துமா மற்றும் உடல் ஒவ்வாமை போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, குழந்தைகள் தெருக்களில் விளையாடும் போது, இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகையினை சுவாசித்து திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுவதாகவும், இதனால் அடிக்கடி அக்குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், அதிகப்படியான பணத்தை மருத்துவமனைகளிலேயே செலவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், தொழிற்சாலையை உடனடியாக மூட கோரி காமராஜபுரம் பகுதி மக்கள், தங்களது பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தோல் தொழிற்சாலையை முற்றுகையிட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சூர்யா என்னும் பெண், "இப்பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு, பால் கொடுத்தால் குழந்தை வாந்தி எடுத்து மயங்கி விழுகின்றனர். மூன்று நாட்களாக என் குழந்தையை நான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருகிறேன்.

எங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து 4 ஆண்டுகளாக தொழிற்சாலை நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இன்னும் பல குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அதிக துர்நாற்றம் வீசுகிறது. இதனால் எங்களுள் பெரும்பாலானவர்களுக்கு வாந்தி ஏற்படுகிறது.

குறிப்பாக, முதியவர்களுக்கு ஆஸ்துமா, மூச்சிழைப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். இதனால், நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் தொழிற்சாலை நிர்வாகத்திடம் புகாரளிக்க வந்தோம். இருப்பினும், தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் சரியான முறையில் பதிலளிக்கவில்லை. எனவே, அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு.. நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.