மணல் கடத்தலை தடுத்ததால் ஆத்திரம்.. வீடு புகுந்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி கைது!

மணல் கடத்தலை தடுத்ததால் ஆத்திரம்.. வீடு புகுந்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி கைது!
Sand smuggling: கூத்தாண்டகுப்பம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த தெக்குமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). இவர் ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கூத்தாண்ட குப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இரு தினங்களுக்கு முன்பு மணல் திருடிச் சென்ற பிரபாகரனை நிறுத்தி மணல் திருட்டில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு பிரபாகரன் மணல் கடத்தலில் ஈடுபடும் போது, கூத்தாண்டகுப்பம் பகுதியில் மணல் கடத்திச் சென்ற டிராக்டரை ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி பறிமுதல் செய்தார். போலீசாருக்கு வெங்கடேசன் தகவல் தெரிவித்து இருக்கலாம் என பிரபாகரன் தவறாகப் புரிந்து கொண்டு மது அருந்திவிட்டு வெங்கடேசன் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், கற்களை வீசி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த பகுதி மக்கள் பிரபாகரனை மடக்கி பிடித்து வீட்டுற்குள் தள்ளி பூட்டு போட்டு ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் நிலைய போலீசார் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பிரபாகரனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கூத்தாண்ட குப்பம் பகுதியில் இரவு நேரங்களில் அதிக அளவில் மணல் கடத்துவதற்கு உடந்தையாக இருக்கும் இரு நபர்களான ஏழுமலை மற்றும் ராமசாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
