வகுப்பறை முன்பு மலம் கழித்த சமூக விரோதிகள்..! உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பெற்றோர்கள் கோரிக்கை..!

வகுப்பறை முன்பு மலம் கழித்த சமூக விரோதிகள்..! உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பெற்றோர்கள் கோரிக்கை..!
Tirupattur Govt school: வாணியம்பாடி அருகே அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை முன்பு, மனித கழிவுகளை விட்டுச் சென்ற சமூக விரோத செயலால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள, 1 ஆம் வகுப்பு வரை 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளியில், 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று (நவ.20) வார விடுமுறைக்கு பிறகு, இன்று காலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை ஒன்றின் முன்பு, சில சமூக விரோதிகள் வகுப்பறையின் முன்பு மனிதக் கழிவுகளை கழித்து விட்டுச் சென்றுள்ளனர்.
மேலும் பள்ளி வளாகத்தில் மது அருந்தி விட்டு, மதுபான பாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்றவற்றை வகுப்பறை முன்பே போட்டு விட்டுச் சென்றுள்ளனர். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், அந்த வகுப்பறையில் பயிலும் மாணவர்களை வேறு வகுப்பறைக்கு மாற்றம் செய்தனர்.
இதையும் படிங்க: கோயில்கள் மட்டுமே டார்கெட்.. சிவகிரி பகுதியில் சிக்கிய பலே திருடன்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
அதன் பின்னர், இச்சம்பவம் குறித்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் கண்ணம்மாள் மற்றும் அப்பள்ளியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் இணைந்து, வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் வட்டார கல்வி அலுவலர், வகுப்பறை முன் மனித கழிவுகளை கழித்து அசுத்தம் செய்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் இருப்பதால், சமூக விரோதிகள் ஊடுருவி இதைப் போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுவதாக குற்றம் சாட்டும் மாணவர்களின் பெற்றோர்கள். இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளியின் சுற்றுச்சுவர்களை பராமரித்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வகுப்பறையின் முன்பு, சமூக விரோதிகள் மனித கழிவுகளை கழித்து விட்டுச் சென்ற சம்பவம் அப்குதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதைப் போன்ற சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளி வளாகத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
