ETV Bharat / state

தேர்வு எழுதிய 114 மாணவர்களில் 2 பேர் மட்டுமே தேர்ச்சி! தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

author img

By

Published : Jul 17, 2023, 8:09 PM IST

ஆம்பூரில் தனியார் கலைகல்லூரியில் மூன்றாம் ஆண்டு இறுதி தேர்வு எழுதிய 114 மாணவர்களில் 2 பேர் மட்டுமே தேர்ச்சி. தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

திருப்பத்தூர்: ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியில் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் மஜ்ஹருல் உலூம் என்ற தனியார் கலைக் கல்லூரியில் ஆண், பெண் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம். சி.எஸ். மற்றும் பி.காம் வணிகவியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளில் சுமார் 114 மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

இந்த நிலையில், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் கடந்த மாதம் பி.காம் சி.எஸ் மற்றும் பி.காம் வணிகவியல் இறுதித் தேர்வை எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகிய நிலையில் 114 மாணவர்களில் 2 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது கல்லூரி நிர்வாகத்தினர் முறையான பதில் அளிக்கவில்லையென கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் இதுகுறித்து கல்லூரி மாணவர் முகமது ஜஹீர் கூறுகையில், "நாங்கள் 2020 - 2023ஆம் கல்வியாண்டில் இந்த கல்லூரியில் பி.காம் சி.எஸ் பாடப்பிரிவில் 56 மாணவர்கள் மற்றும் பி.காம் வணிகவியல் பாடப்பிரிவில் 58 மாணவர்கள் என மொத்தம் 114 பேர் பயின்று வந்தோம்.

கடந்த கடைசி ஐந்து செமஸ்டர்களில் அனைத்திலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இந்த செமஸ்டரில் மூன்று, நான்கு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை எனத் தேர்வு முடிவுகள் வந்துள்ளது. மேலும் 4 பாடப்பிரிவுகளில் 1 மதிப்பெண், 2 மதிப்பெண் என்ற ஒற்றை இலக்க மதிப்பெண்களே வந்துள்ளது.

இதுகுறித்து தேர்வு முடிவுகளை மறுகூட்டல் செய்ய கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டபோது கல்லூரி நிர்வாகம் சரியாகப் பதிலளிக்கவில்லை. தேர்வு முடிவு வந்து பத்து நாட்களான நிலையில் இதற்கு பிறகுதான் இதுகுறித்து விசாரணை செய்வதாக கல்லூரி நிர்வாகம் கூறுகின்றனர்.

மேலும், மறுகூட்டல் செய்ய மீண்டும் பணம் செலுத்த வேண்டும், மேற்படிப்பிற்காக கட்டணம் செலுத்தியவர்களுக்கு தற்போது தேர்வு முடிவு தேர்ச்சி பெறவில்லையென வந்துள்ளதால், மேற்படிப்பு படிப்பதற்கு தடை ஏற்பட்டுள்ளது. பி.காம் சி.எஸ் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று முதுகலை பயில சில மாணவர்கள் முன்னதாகவே பணம் செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே சில மாணவர்கள் முதுகலை பயில கல்லூரியில் கட்டியுள்ள பணத்திற்கு கல்லூரி நிர்வாகம் உத்ரவாதம் அளிக்கவில்லை. மேலும், முதுகலை எம்.பி.ஏ படிப்பிற்கான வகுப்புகள் துவங்கப்பட்டு ஒரு வார காலம் ஆகிய நிலையில் தேர்வு முடிவில் ஏற்பட்ட குளறுபடியில் மாணவர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

மேலும் எந்த ஒரு பல்கலைக்கழகமும் கல்லூரி தேர்வு முடிவுகளை வாரநாட்களில் தான் வெளியீடும் ஞாயிற்று கிழமைகளில் தேர்வு முடிவுகளை வெளியிடமாட்டார்கள். கடந்த ஐந்து செமஸ்டர் தேர்வு முடிவுகளும் வாரநாட்களில் தான் வெளியிட்டனர். ஆனால், தற்போது கடைசி செமஸ்டர் தேர்வு முடிவை மட்டும் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளனர்.

தேர்வு எழுதிய மதிப்பெண்களை இவர்களே டைப் செய்து மதிப்பெண் அளித்தது போல் தெரிகிறது, சரியான முறையில் தேர்வுத்தாளை திருத்தவில்லை. எங்களுக்கு தெரியும் நாங்கள் எழுதிய தேர்வு தாளில் எவ்வளவு மதிப்பெண் வரும் என்று ஆனால் நாங்கள் எழுதிய மதிப்பெண் கூட வரவில்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வில் சாதனை புரிந்த சேலம் மாணவர்கள்! சிறப்பு பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.