ETV Bharat / state

திருப்பத்தூரில் தீண்டாமை கொடுமை? திடீர் சாலை மறியலால் பரபரப்பு!

author img

By

Published : Dec 12, 2022, 9:51 AM IST

திருப்பத்தூரில் தீண்டாமை கொடுமை
திருப்பத்தூரில் தீண்டாமை கொடுமை

ஆதிதிராவிடர் நலத்துறையினர் அளித்த இலவச வீட்டுமனைக்கு செல்லும் வழியை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாகவும் அவ்வழியாக செல்பவரை ஜாதி பெயர் சொல்லி தரக்குறைவாக பேசியதாகவும் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்குக் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 42 வீட்டுமனைகள் அதே பகுதியில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டுமனைக்குச் செல்லும் வழியை தற்போது வேறு சமூகத்தினர் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து அவ்வழியாக யாரும் செல்லக் கூடாது எனக் மறுப்பதாகவும், . மேலும் அவ்வழியாகச் செல்வோரைச் சாதிப் பெயரால் தரக்குறைவாகப் பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உமராபாத் காவல்நிலையத்தில் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாணியம்பாடி - ஆம்பூர் சாலையில் தடுப்புகளை அமைத்தும் குப்பைகளைக் கொட்டியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உமராபாத் காவல்துறையினர் மற்றும் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் ஆம்பூர் - வாணியம்பாடி சாலையில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயலால் சாலையோர வியாபாரிகள் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.