ETV Bharat / state

தருவைகுளத்தை நெருங்கும் பேராபத்து.. 'தூண்டில் பாலம்' அமைக்க அரசிடம் மன்றாடும் மீனவர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 10:31 PM IST

Updated : Aug 23, 2023, 11:08 PM IST

Thoothukudi Fishermen Request to build a Thoondil Palam: தூத்துக்குடியில் வாழ்வாதாரத்திற்காக வைத்திருக்கும் படகுகளை பாதுகாப்பதற்கும், சிக்கலான கடல் அலைகளின் நடுவே கடல் சீற்றத்தில் இருந்து தப்பிக்கவும் முடியாமல் தினமும் பல சவால்களை சந்திக்கும் மீனவர்களின் நீண்டநாள் துயரம் குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

'தூண்டில் பாலம்' அமைக்க அரசிடம் மன்றாடும் மீனவர்கள்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையில், கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு அபாயம் வருவதற்குள் அரசு உடனடியாக ’தூண்டில் பாலம்’ அமைக்க வேண்டும் என்ற மீனவர்களின் நீண்டகால கோரிக்கையை அரசு கவனம் கொள்ளுமா? என்று கேள்வியெழும்பியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் மீன்பிடி தொழிலை நம்பி, 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆழ்கடலுக்கு சென்றும் மீன் பிடித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தருவைகுளம் கடற்பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 40 முதல் 70 மீட்டர் வரை அதாவது, 200 அடி வரை கடல் நீர் வெளியே வந்துள்ளது. இந்த கடல் சீற்றம் காரணமாக கடற்கரை ஓரமிருந்த மீனவர்களின் ஏழக் கூடம், மீனவர்கள் வலைப் பின்னும் கூடம் மற்றும் படகு பழுதுப் பார்க்கும் பகுதியானது சேதமடைந்துள்ளது.

தொடர்ந்து, கடல் சீற்றம் அதிகரித்து வருவதால் கடற்கரை அருகே உள்ள மீனவர்களின் சங்கம் மற்றும் மீனவர்களின் வலைப் பின்னும் கூடம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக சுமார் 50 அடி தூரத்திற்கு மீனவர்கள் தங்கள் சொந்த செலவில் கருங்கற்களை போட்டு பாதுகாத்து வருகின்றனர். மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை கட்டி மீன்கள் இறக்க முடியாமலும், ஐஸ் போன்றவற்றை ஏற்ற முடியாமலும் கடல் சீற்றத்துடன் இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மீன் இறங்கு தளத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் கட்டப்படும் போது, சீற்றம் காரணமாக விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதோடு, இறங்கு தள கட்டடத்தில் அடித்து கொண்டு போய் சேதமடைகின்றன. இதன் காரணமாகவே, ஆண்டுதோறும் 20-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் முற்றிலுமாக சேதமாகி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் குமுறுகின்றனர். ஆகவே, தமிழக அரசும், மீன்வளத்துறையும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தருவைகுளம் மீனவ கிராமத்தை பாதுகாக்கும் வகையில் 'தூண்டில் பாலம்' அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சந்திரயான் 3 வெற்றி 140 கோடி மக்களின் வெற்றி - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த 80 வயது முதியவரும், 40 வருடங்களாக படகு ஓட்டுநருமாக இருந்தவருமான அந்தோணி பிச்சை நம்மிடையே அவர் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'கடலில் முதலாவதாக கட்டுமரம்தான் மீன்பிடிக்க பயன்படுத்தினர். அந்நேரத்தில் பலகையால் படகு செய்து உபயோகித்தது தூத்துக்குடியும், தருவைகுளமும்தான். வேறு எங்கேயும் பலகையால் படகுகள் கிடையாது; காரணம், அனைத்து இடங்களிலும் கடல் சுரப்பு உண்டு. அதனால், மரத்தாலான பொருட்களை வைத்து கடலுக்கு செல்ல முடியாது. ஆகவே, கட்டுமரம் வைத்து தொழில் செய்தார்கள். தூத்துக்குடி மிகப்பெரிய துறைமுகம் என்பது எல்லோரும் அறிந்ததே. அப்போது கப்பல் கிடையாது; ஆகையால், பலகையால் செய்யப்பட்ட தோணிகளை கொண்டு வணிகம் செய்துவந்தனர். இதற்கு காரணம், அப்போது அமைதியாக இருந்த கடல் நீரின் சூழ்நிலையால் இந்த மரப் படகுகளை கொண்டு தொழில் செய்து வந்தோம்.

தூண்டில் வளைவுக்கு பதிலாக, பலனற்ற இறங்கு தளம் அமைத்த அரசு: சுனாமிக்கு பின்னர் இயற்கையாக கடலில் ஏற்படும் மாற்றத்தால், வரலாறும் முற்றிலுமாக மாறிப்போனது. இந்த சீற்றத்தால், கடல் மட்டம் கூடி கிட்டத்தட்ட 250 மீட்டர் கிழக்கே இருந்த கரை 250 மீட்டருக்கு கரையை நோக்கி கொஞ்சம், கொஞ்சமாக வர தொடங்கியது. சுனாமிக்கு பின்னர் கடல் சுரப்பு அதிகமாகி விட்ட காரணத்தினால், தொழில் செய்ய மீனவர்களால் முடியவில்லை. அதனால், தூண்டில் வளைவு கேட்டோம். ஆனால், எங்களுக்கு அரசு கொடுத்தது மீன் இறங்கு தளம், அதுவும் ஒருவருடம் நன்றாக இருந்தது. அதன் பின் இறங்கு தளத்தில் எந்தவித தொழிலும் செய்ய முடியவில்லை என்று வருந்தினார்.

வரவிருக்கும் மிகப்பெரிய ஆபத்து: ஒருபடகு ஒருமணி நேரம் அங்கு நின்றால், அலையின் சீற்றம் காரணமாக இறங்கு தளத்தில் முட்டி, மோதி படகு சேதமாகி விடுகிறது. இதனால், படகை சரிசெய்ய கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் செலவு ஏற்படுகிறது. இதனால், இறங்கு தளம் அமைத்து ஒரு பிரயோஜனமும் இல்லை. இதனால், மிகப்பெரிய தீமை வரப்போகிறது. ஆம் வருகின்ற காலம் புயல் காலம். இப்பொழுது இரண்டு வருடத்திற்குள்ளாக 100 மீட்டர் கடல் நீர் உள்ளே வந்துவிட்டது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து கற்களை கொட்டியுள்ளோம். இதுதான் எங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கில் முதலீடு செய்து தொழில் செய்து வருகிறோம். இதை நம்பி வெளிநாட்டு ஏற்றுமதியும் நடந்து கொண்டிருக்கிறது.

'தூண்டில் பாலம்' அமைக்க உடனடியாக நடவடிக்கை தேவை: மழைக்காலம் அதாவது, மழை வந்தால் 'புயல்', புயல் வந்தால் 'மழை' என வரும்பட்சத்தில் தருவைகுளத்தில் உள்ள அத்தனை படகுகளும் சுக்குநூறாக உடைந்துவிடும் அபாயம் ஏற்பட உள்ளது. ஆகவே, அரசு உடனடியாக 'தூண்டில் பாலம்' அமைத்து மக்களை காக்க வேண்டும்' என்று கவலையுடன் தெரிவித்தார்.

பின்னர், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் லூர்து ராஜ் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு இது குறித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'தருவைகுளம் பகுதியில் 200 விசைப்படகுகள், 150 நாட்டுப்படகுகள் உள்ளது. 2013-ல் மீன்பிடி இறங்கு தளமும், அதன் பின் சிறியதாக மற்றொரு ஒரு மீன்பிடி இறங்க தளமும் தமிழக அரசு அமைத்து கொடுத்தது. தற்போதுள்ள கடல் அரிப்பின் காரணமாக, மீன்பிடி இறங்குதளத்தில் மீன்களை இறக்க முடியவில்லை. கடல் அரிப்பு அதிகமாகியுள்ளது. படகுகளை பிய்த்து கொண்டு போகிறது.

கடலுக்குள் மூழ்கவிருக்கும் கட்டடங்கள்; தூண்டில் வளைவுக்காக போராடும் மீனவர்கள்: கடந்த இரண்டு வருடத்திற்குள் 50, 60 மீட்டருக்கு கடல் அரிப்பு வந்துவிட்டது. இதனால் அருகில் உள்ள கட்டடங்கள் கடலுக்குள் போகின்ற சூழ்நிலை, கடற்கரை ஓரத்தில் கற்களைப் போட்டு இருக்கின்றோம். இது அரசாங்கம் செய்யவில்லை நாங்கள் பணம் போட்டு செய்துள்ளோம். மேலும், இந்த கற்களை இங்கு கொட்டியுள்ளதனால் எங்களால் நடமாட முடியவில்லை என வருந்தினர். ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை; வலைகளைக் கொண்டு போக மிகவும் சிரமமாக உள்ளது. இரண்டு ஆண்டுகளாக 'தூண்டில் வளைவு' கேட்டு போராடுகிறோம். ஆனால், இதுவரை செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆகவே, அரசு கவனம் செலுத்தி தூண்டில் பாலம் அமைத்து தரவேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை தேவை: மேலும், திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் தூண்டில் பாலம் அமைக்க வேண்டி ரூ.58 கோடி நிதி ஒதுக்கி பின்னர், அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் 12 நாளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தன. அதே போன்று, இந்த கிராமத்திலும் போராட்டங்கள் நடக்கும் முன்னர் தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கி தூண்டில் பாலம் கட்டி மீனவர்களின் வாழ்வாதாரம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல தரப்பினரின் நீண்டகால கோரிக்கையாகும்.

இதையும் படிங்க: தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் - தூத்துக்குடி அமலிநகர் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

Last Updated : Aug 23, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.