ETV Bharat / state

தூத்துக்குடி கனமழை வெள்ளத்தால் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர் - மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 7:40 PM IST

மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி
மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி

Thoothukudi District Collector Lakshmipathy: தூத்துக்குடி தாழ்வான பகுதியாக இருப்பதால் மின் மோட்டார் மூலமாக தேங்கி உள்ள மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், இந்த பணிகள் முழுமையாக முடிய ஒரு வார காலமாகும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நெடுஞ்சாலை செயலர் கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் 60 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளம் அதிகமாக உள்ளதால் குடிநீர், உணவு போன்ற வசதிகள் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மதுரையில் இருந்து 6 ஹெலிகாப்டர் மூலமாக பொதுமக்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

மேலும், மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதியில், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தங்கி இருக்கிறார்களோ, அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி தாழ்வான பகுதியாக இருப்பதால், தண்ணீர் வடிவதற்கு கூடுதல் காலம் எடுக்கும் என்பதால், மின் மோட்டார் மூலமாக தேங்கி உள்ள மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் துண்டிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு அரசுத் துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மீன்வளத் துறையினர் படகு மூலமாகச் சென்று, அந்த கிராமங்களில் உள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து முழுமையாக குறையாத நிலையில், அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, கருங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை மீட்பதற்காக 25 பேரிடர் மீட்புக் குழுவினர், 150 ராணுவத்தினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 26 ஆயிரம் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், பிற மாவட்டங்களில் இருந்தும் உணவுப் பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் 5 துணை கூடுதல் ஆட்சியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும், திருச்செந்தூர் ரயிலில் சிக்கிய பயணிகளை வெளியே கொண்டு வரும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்களை பள்ளி, திருமண மண்டபம் ஆகிய இடங்களில் சேர்த்து உள்ளோம். இந்த பணிகள் முழுமையாக முடிய ஒரு வார காலமாகும்.

தூத்துக்குடியில் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். நாளை (டிச.20) தூத்துக்குடி மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி வெள்ளம்..! நலத்திட்ட உதவிகள் வழங்கிய எடப்பாடி பழனிசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.