ETV Bharat / state

சிதிலமடைந்து கிடக்கும் ஆங்கிலேயர் காலத்து தடுப்பணை

author img

By

Published : Sep 30, 2020, 12:13 PM IST

dam
dam

தூத்துக்குடி: இருபோகம் விளைந்த பூமி இன்று வானம் பார்த்த பூமியாக மழைக்காக ஏங்கி நிற்கும் நிலை, இதயத்தை மறு பரிசோதனை செய்து பார்க்கும் முயற்சியாக உள்ளது என்று வேதனை தெரிவிக்கின்றனர், விவசாயிகள். அலுவலர்கள் வந்தார்கள் சென்றார்கள், இடிந்த தடுப்பணையை சீரமைக்க எந்த முயற்சியும் எடுத்தபாடில்லை என புலம்பித் தவிக்கின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை, ரயில்வே திட்டம், கல்வியில் சீர்திருத்தம், மன்னர் கால வரலாற்றுச் சின்னங்கள் என ஒவ்வொரு சிற்பங்களும் காலனியாதிக்க வேர்களை நமக்கு ஞாபகப்படுத்தும். ஆங்கிலேயர்கள் இங்கிருக்கும் பசுமையான வேர்களை கொள்ளையடித்துச் சென்றது போன்று, பழமையான நகரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்பித்துச் சென்றுள்ளனர் என்பதே நிதர்சனம்.

அவ்வாறு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட பல அற்புத திட்டங்களும், கோட்டைகளும் வரலாற்றுச் சின்னங்களாக இன்றளவும் நம் ஊர்களில் இருப்பதைக் காணலாம். தற்போது, வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியாவில் சில இடங்களில் கட்டப்படும் கட்டடங்கள், தடுப்பணைகள் ஆறுமாதம் கூட நீடிப்பதில்லை, விரிசல் ஏற்பட்டு இடிந்து விழக்கூடிய சூழல் ஏற்படுகிறது.

சீரமைக்காமல் இருக்கும் தடுப்பணை
சீரமைக்காமல் இருக்கும் தடுப்பணை

ஆனால், சரியான கட்டுமான வசதிகள் இல்லாத காலகட்டத்திலும் தமிழ் மன்னர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை உலகமே வியக்கும் அளவுக்குப் பல கட்டுமானங்களை நமக்கு அழியாச் சின்னங்களை தந்துள்ளனர். அவற்றில் முல்லைப் பெரியாறு அணை, செஞ்சி கோட்டை, திருச்சி மலைக்கோட்டை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, ரயில் வழித்தடம், தடுப்பணைகள், கண்மாய்கள் உள்ளிட்டவை இன்றளவும் ஆங்கிலேயரின் பெயர் சொல்லும் கட்டுமானங்களாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றன.

இடிந்து விழும் நிலையில் உள்ளது
இடிந்து விழும் நிலையில் உள்ள அணையின் பக்கச் சுவர்கள்

தற்போது, அவற்றை நாம் முறையாக பராமரிப்பதில்லை என்பதே குற்றச்சாட்டாக உள்ளது. அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்குட்பட்ட தெற்கு கல்மேடு ஊரில் அமைந்துள்ளது, சண்முகக்குளம் தடுப்பணை. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயரால் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, சீரமைப்பு செய்யப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.

கண்மாயின் வடதிசையில் உள்ள மதகுகள் புனரமைப்புப் பணிகள் இல்லாததால் துருப்பிடித்து தூர்ந்து போகும் நிலையில் உள்ளன. தடுப்பணையில் இருந்து 50 மீட்டர் இடைவெளியில் இடதுபுறமாக கண்மாயின் தடுப்புச்சுவர் முற்றிலுமாக இடிந்து சரிந்து கிடக்கிறது. அதன் தடுப்புச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கும் விழுதுகள் போல நிற்கின்றன.

சிதிலமடைந்து கிடக்கும் ஆங்கிலேயர் காலத்து தடுப்பணை

தடுப்பணையைச் சுற்றி காய்ந்து போன பொட்டல்காடுகளாகவும், கண்மாயில் தண்ணீர் இல்லாததால் வெடிப்பு வந்த நிலம்போலவும் காட்சியளிக்கிறது. 'எப்போதும்வென்றான்' பகுதியில் கட்டபொம்மன் கண்மாய் தடுப்பணையிலிருந்து வெளியேறும் உபரி நீரானது ஆதனூர், காட்டுநாயக்கன்பட்டி, முள்ளூர் ஓடை வழியாக இந்த தடுப்பணையை வந்து சேர்கிறது.

இங்கு சேமிக்கப்படும் தண்ணீரைக் கொண்டு வடக்கு கல்மேடு, பட்டினமருதூர், துரைசாமிபுரம், வேப்பலோடை உள்பட சுற்றுவட்டார 10 கிராமங்களிலும் நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. தற்போது, கல்லாற்று நீர் வழிப்பாதையில் மனித ரத்தத்தை உறிஞ்சும் அட்டைபோல கருவேலை மரங்கள் மண்டி கிடக்கின்றன. கண்களுக்கு எட்டிய தூரம் வரை பாறைகளும், கூழாங்கற்களும் மட்டுமே தென்படுகிறது.

கண்மாய் நீரை நம்பி விவசாயம் செய்து வந்த விவசாயிகள், இன்று உப்பளத்திற்கும், மானாவாரி பயிர் விவசாயத்திற்கும் மாறியுள்ளனர். இப்பகுதியில் மானாவாரி பயிராக வத்தல், உளுந்து உள்ளிட்டவை மட்டுமே பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. இருப்பினும் கடந்த 32 ஆண்டுகளாக சீரமைக்காமல் கிடக்கும் தடுப்பணையை சீர் செய்ய பலமுறை அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எந்தவித பலனுமில்லை. இதுதவிர கிராம சபைக் கூட்டம், ஜமாபந்தி நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கூட கல்லார் நீர் வழித்தடத்தையும், கண்மாயையும் சீரமைக்க வலியுறுத்தி தீர்மானம் இயற்றியுள்ளனர்.

ஆனால், அலுவலர்களிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் செல்லாப்பெட்டியில் உறங்குவதுதான் வேதனையளிக்கிறது. கண்மாய் நீரை நம்பி பாசன வசதி செய்து வந்த பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் வறட்சியால் வாடி வதங்கிவிட்டன. மிஞ்சியிருக்கும் நூறு ஏக்கர் நிலத்தில் மானாவாரி பயிர் விவசாயம் குறுகிவிட்டது. மீதியுள்ள இடங்கள் உப்பளங்களாக மாறிவிட்டன. பெயரளவுக்கு அலுவலர்கள் கண்மாயை சீரமைக்க அளவீடு செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இருபோகம் விளைந்த பூமி இன்று வானம்பார்த்த பூமியாக இருப்பது இதயத்துடிப்பை சோதித்துப் பார்க்கும் முயற்சிதான் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர், விவசாயிகள்.

இதையும் படிங்க: கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டம் இல்லை என்பது வருந்தத்தக்கது - சு. வெங்கடேசன் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.