ETV Bharat / state

’தமிழ்நாடு அரசியல் கட்சிகளுக்கு முதுகெலும்பில்லை’ - பாத்திமா பாபு

author img

By

Published : Apr 29, 2021, 7:06 AM IST

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் விஷயத்தில் மக்களின் உணர்வுகளை நீதிமன்றத்தில் முன் எடுத்து வைக்க, தமிழ்நாடு அரசியல் கட்சிகளுக்கு முதுகெலும்பில்லை என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு
செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (ஏப். 28) இரவு புதுத்தெரு பகுதியில் மக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதாக முடிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை சந்தித்து மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் பேராசிரியை பாத்திமா பாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு

அப்போது அவர் பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் மீண்டும் தூத்துக்குடிக்குள் நுழைய முயல்கிறது. இது தூத்துக்குடி மக்களுக்கு மிகவும் வருத்தத்தைத் தருகின்றது.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசும், மக்களும் இழப்பைச் சந்தித்திருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜனைக்கூட நம்மால் பெற முடியாத சூழல் உள்ளது.

அதற்கு அவர்கள் கூறிய காரணமும் நம்மை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. அங்கு தயாரிக்கக்கூடிய ஆக்சிஜனைக் கையாளும் அளவிற்கு தமிழ்நாட்டில் திறன் இல்லை என்றும், அறிவுஜீவிகள் இல்லை என்றும் கூறியுள்ளனர். இது நம்மை அவமானப்படுத்தும் செயல்.

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிப்பதற்கு அனுமதி கொடுத்த விஷயத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஏனைய பிற கட்சிகளாக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை, எண்ணங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

மக்களின் விருப்பத்தை நீதிமன்றத்தின் முன் எடுத்துவைக்க முதுகெலும்பில்லாத கட்சிகள் என்றே தமிழ்நாடு அரசியல் கட்சிகளைச் சொல்ல வேண்டும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறுவதற்கு முன்னர், அதைத் தடுப்பதற்கு ஒரு வழி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை இழைத்த பசுமை விதிமீறல், சுற்றுச்சூழல் சீர்கேடு, நச்சு வாயு வெளியேற்றம் உள்ளிட்ட குற்றங்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறுவதற்கு முன் தடுத்து நிறுத்தலாம்.

ஸ்டெர்லைட் விஷயத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு தூத்துக்குடி மக்கள் எதிரானவர்கள் அல்ல. ஏற்கனவே மக்களின் மனங்கள் நொந்துபோய் உள்ளன.

இதைச் சரிசெய்ய அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களைச் சரியான இடத்தில் நிற்கவைப்போம். நிற்கவைப்பதற்கான முயற்சிகள் எடுப்போம். அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்தும் நாங்கள் திட்டமிட்டுவருகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: புகழ்பெற்ற எழுத்தாளர் மனோஜ் தாஸ் காலமானார்; பிரதமர் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.