ETV Bharat / state

திரைப்படத்தில் நடிப்பதால் மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்குத் தகுதி வந்துவிடுமா? - சீமான் ஆவேசம்!

author img

By

Published : Jun 19, 2023, 8:12 AM IST

Updated : Jun 19, 2023, 12:44 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன் பின்பு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

seeman
seeman

திரைப்படத்தில் நடிப்பதால் மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்குத் தகுதி வந்துவிடுமா? - சீமான் ஆவேசம்!

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட மூன்று சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எட்டயபுரம் பாரதியார் மணி மண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியார் திருவுருவைச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து மண்டபத்துக்கு வந்த சீமான் முன்னிலையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்.

பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது; ''நாட்டில் நீர் வளம், நிலவளத்தைத் தாண்டி அறிவு வளம் முக்கியம். ஒரு நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில் தான் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு வகுப்பறை வர்த்தக அறையாக மாறிவிட்டது. யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ அவர்கள் நல்ல கல்வியை கற்றுக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளது. காரணம் மாணவர்கள் வரவில்லை. ஏன் வரவில்லை. பள்ளிகள் தரம் இல்லை.

செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்க்க முடியவில்லை ஏன்? தரமாக இல்லை. தரங்கெட்டவர்கள் கையில் அதிகாரம், மற்ற நாடுகளில் கல்வி, குடிநீர், மின்விநியோகம் என்று அரசு நடத்தும் அனைத்தும் தரமாக உள்ளது ஏன்? தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் சாலை சரியாக உள்ளதா?

விவசாயத்திற்குத் தனிபட்ஜெட் போட்டால் போதாது, விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை, 100நாள் வேலை திட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்று இங்கு தெரியவில்லை. கடலில் சிலை வைக்க, டாஸ்மாக் மது பாட்டில்களை பாதுகாக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை உயிர் பாதுகாக்கும் விவசாயப் பொருட்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை.

சினிமா டிக்கெட் விலை என்ன? விவசாயப் பொருட்களின் விலை என்ன? ஊழல், லஞ்சம் பற்றி பேச பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, கட்சிகளுக்கு அருகதை இல்லை. மணிப்பூர் கலவரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. மணிப்பூர் போல தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க பாஜக முயல்கிறது. விஷத்தை கொடுத்து ஒரு குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க முடியும் என்று நம்பவில்லை. ஸ்டெர்லைட் வேண்டாம் .. வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லட்டும். தாமிரத்தைப் பற்றி பேசுபவர்கள், தண்ணீரைப் பற்றி பேசுவார்களா? அங்கு வேலை பார்ப்பவர்கள், அந்த ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி குடியிருப்பார்களா?

மேலும் அரசியலுக்கு வர நடிகர் விஜய் விரும்புகிறார்.‌ நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஆண்டுகளாக மறைமுகமாக நல்லது செய்து வருகிறார். ஆனால், நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர விரும்புவதால் அதை வெளிப்படையாக செய்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதை வரவேற்கலாம், பாராட்டலாம், வாக்கு செலுத்துவதற்குப் பணம் கொடுக்கவும் வாங்கவும் கூடாது என்ற எனது கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தம்பி விஜய் பேசியுள்ளார். அது வரவேற்க வேண்டிய விஷயம். வாக்குக்கு பணம் கொடுக்கும்போது மக்களுக்கான சேவை ஒழிந்து விடும். நேர்மையான அரசியல், ஆட்சி அமையாது என்றும், இவ்வளவு நாள் ஏன் வரவில்லை என்றும் கேட்கக் கூடாது.

இந்த தருணத்தில் அரசியலுக்கு வர தம்பி விஜய் விரும்புகிறார். என்னுடைய கொள்கை வேறு, மேலும் சமரசம் செய்து கொள்வது என்பது என்னிடம் இல்லை. தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வாழ்த்துவோம். என்னுடைய பாதை வேறு, அவருடைய பாதை வேறு, தம்பி விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அதை அவர் தாராளமாக செய்யட்டும்’’ என்றார்.

''நல்லது செய்வதை தட்டிக் கொடுக்கலாமே தவிர தள்ளி விடக்கூடாது. மேலும் இன்றைக்குள்ள அரசியல் தலைவர்களில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மிகச் சிறந்தவர். அவரை ஒரு வார்டு கவுன்சிலராக கூட நம்மால் ஆக்க முடியவில்லை என்பது தலைகுனிவு. அவரை போன்ற ஒரு மனிதன் இந்த தலைமுறையில் வாழ்வது அரிது’’ என்றார்.

தொடர்ந்து பேசிய சீமான், ''அதுமட்டுமில்லாமல் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழி நடத்துவதற்கு, தலைவனாக இருப்பதற்கு தகுதி வந்து விடுவது என்று கூறுவது அவமானகரமானது. இது மாறாது. எல்லோரும் சேர்ந்து தான் மாற்ற வேண்டும்’’ என்றார்.

இதையும் படிங்க: Actor Vijay: சக்சஸில் முடிந்த 234.. விஜயின் அரசியலுக்கு விடியல் தருமா?

Last Updated : Jun 19, 2023, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.