‘இனி கஷ்டம் வந்தால் கள்ளச்சாராயம் குடித்தால் போதும் ரூ.10 லட்சம் கிடைக்கும்’ - சீமான்

author img

By

Published : May 17, 2023, 6:09 PM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்

தமிழ்நாட்டில் இனி கஷ்டம் வந்தால் யாரும் பால்டாயில், எலி மருந்து போன்ற விஷத்தை குடித்து உயிரிழக்க வேண்டாம், விஷசாராயம் குடித்தால் போதும் வீட்டிற்கு 10 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என சீமான் கள்ளச்சாராய விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்

தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு நாளை (மே 18) தூத்துக்குடி மாநகரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்த அவர், தூத்துக்குடி மறவன்மடத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்த நூற்றாண்டில் எங்கும் நடக்காத இனப்படுகொலை மே 18 நடத்தது. இந்த இனப்படுகொலையை உலகமெங்கும் தமிழ்நாடு மக்கள் அனுசரிக்கின்றோம். இன எழுச்சி நாளாக கருதி எழுச்சி கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக 2018 மே 18 நாம் தமிழர் கட்சி என்ற இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. எங்களுடைய உணர்வை, எங்களுடைய வேலை திட்டங்களை இருமடங்காக உயர்த்தி கொள்வதற்கு அறிய வாய்ப்பாக மே 18 ஆம் தேதியை பார்க்கிறோம்” என்றார்.

தமிழ்நாடு அரசு இரண்டாண்டு சாதனை குறித்த கேள்விக்கு?, “தமிழ்நாடு அரசு சாதனை என்னவென்றால் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் ரூபாய், இது தான் பெருத்த சாதனை. இலவச பேருந்து பயணம், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் இதை யார் கேட்டது? கல்லூரி பிள்ளைகள், பெண் பிள்ளைகளுக்கு ஆயிரம் கொடுத்தோம் என்கிறீர்கள். அதனால் இடைநிறுத்தம் பண்ணாமல் தொடர்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். ஆசிரியர் தேர்வு எழுதிவிட்டு 10 வருஷமா காத்துக் கொண்டிருக்கிறோம் பணி கொடுங்கள் என்று மக்கள் நல பணியாளர்கள், கரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து சேவை செய்தோம். பணியை நிரந்தரமாக்கு என்கிறார்கள்.

இலவசமாக தரமான கல்வி, மருத்துவம், தூய குடிநீர், தடையற்ற மின்சாரம், பயணிக்க பாதை இதுதான் அடிப்படைக் கட்டமைப்பு, இது எதும் நடந்திருக்கிறதா? ஒரு அறிவார்ந்த சமூகத்தை வழிநடத்த கூடிய தலைவர்கள் செய்யக்கூடிய செயலாக உள்ளதா? காமராஜர் செய்ததை ஒரு கால் தூசி இந்த ஆட்சிகள் செய்திருக்கிறதா, என் பணத்தை எடுத்து எனக்கு கொடுக்கிறதுக்கு பெயர் நலத்திட்டம் இல்லை நாசக்கார திட்டம்.

ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மக்களை குடிக்க வைத்து விட்டு சுகாதாரம், விளையாட்டு துறை என்று தனி அமைச்சகம். மக்கள் பேரிடர் காலத்தில் இறந்த போது நிவாரணம் கொடுக்கவில்லை கரோனாவில் இறந்த போது பணம் கொடுக்கவில்லை. மீன்பிடிக்க சென்று இறந்த போது 10 லட்சம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. கள்ளச்சாரயம் குடித்தவர்களை முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், போய் பார்க்கிறீர்கள், இறந்து போன மீனவர்களை யாரும் போய் பார்க்கவில்லை.

கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் இறந்து இருக்கிறார்கள். 2 கோடி 10 லட்சம் ரூபாய் பணம் யாருடையது. இவ்வளவு நாள் சாராயம் சம்பாதித்த பணத்தில் தானே நிவாரணம் கொடுத்திருக்க வேண்டும். மக்கள் பணத்தை எப்படி கொடுக்கலாம். நாட்டைக் காப்பாத்த ராணுவத்தில் இறந்தால் நாடு காப்பாற்றும் என்ற குடும்பம் நம்பிக்கையை இந்த நாடு கொடுத்திருக்கின்றதா? இதுவரைக்கும் தமிழ்நாட்டில் இறந்த ராணுவ வீரர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அந்த வீட்டிற்கு வேலை கொடுத்து இருக்கிறதா?

எதிர்க்கட்சியாக இருக்கும்போது கோ பேக் மோடி.. ஆளுங்கட்சியாக இருக்கும் போது வெல்கம் மோடி, எதிர்ச்சியாக இருக்கும் போது இந்தி தெரியாது போடா.. கடந்த ஆட்சியில் பொன்முடி வீட்டு முன்னாடி மதுக்கடையை எதிர்த்து போராடினார். இப்போது எதிர்த்தால் அவர் அரசுக்கு எதிராக பேசுவதாக தானே அர்த்தம்.

பள்ளிக்கூட கட்டிடம் சிதலமடைந்து உள்ளது. அதை கட்டமைக்க நிதி இல்லை. அங்கு தலைமை ஆசிரியர், முன்னாள் ஆசிரியர், உள்ளுரிலிருந்து கொடையாளர்கள் ஒருங்கிணைந்து கட்டி வருகின்றனர். பள்ளிக்கூடத்தை சீரமைக்க பணம் இல்லை. சமாதி வைப்பதற்கும், பேனா வைப்பதற்க்கும் நிதி எங்கிருந்து வருகிறது. இதற்கு பதில் உள்ளதா. காமராஜர், வஉசி, வெள்ளைக்காரனை எதிர்த்துப் போரிட்ட சின்னமலை போன்றவருக்கு சிலை எங்கு உள்ளது?” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் இனி கஷ்டம் வந்தால் யாரும் பால்டாயில், எலி மருந்து போன்ற விஷத்தை குடித்து உயிரிழக்க வேண்டாம். விஷசாராயம் குடித்தால் போதும் கஷ்டமும் தீர்ந்துவிடும். வீட்டிற்கு 10 லட்சம் ரூபாய் பணமும் கிடைத்துவிடும்” என்றார்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் பணத்தில் நிவாரணமா? - ஜெயக்குமார் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.