ETV Bharat / state

தூத்துக்குடியில் மீண்டும் தலை தூக்கும் புதிய ரசாயன தொழிற்சாலை பணிகள்: கொதிக்கும் ஸ்டெர்லைட் போராளிகள்...!

author img

By

Published : Jun 24, 2020, 3:33 PM IST

Updated : Jun 25, 2020, 6:06 AM IST

தூத்துக்குடி சிப்காட் நிறுவனம் மீண்டும் புதிய ரசாயன தொழிற்சாலைகள் அமைக்க மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி கோரியுள்ளதால், அத்திட்டத்தை முளையிலேயே கிள்ள ஸ்டெர்லைட் போராளிகள் களமிறங்கியுள்ளனர். அதுகுறித்த சிறப்புச் செய்தி தொகுப்பு...

chemical-factory-to-re-energize-at-tuticorin
chemical-factory-to-re-energize-at-tuticorin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்தப் போராட்டத்தின் விளைவாக 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 65 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து தமிழ்நாடு அரசால் ஆலை மூடப்பட்டு மே 28ஆம் சீல் வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 'ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு' சம்பவம் குறித்து இன்றளவும் விசாரணைகளும், வழக்குகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு மூலமாகக் கருதப்பட்டது ஆலை விரிவாக்கத் திட்டம். சிப்காட் தொழிற்பேட்டையை விரிவுபடுத்த அதனைச் சுற்றியுள்ள நிலங்களைக் கையகப்படுத்தி விரிவாக்க பணிகளை தொடங்கியதன் விளைவாகவே எதிர்ப்பு போராட்டம் பூதாகரமாக வெடித்து.

அப்படியிருக்கையில் தூத்துக்குடி மக்கள் மற்றும் ஸ்டெர்லைட் போராளிகளை மீண்டும் போராட்டத்திற்கு தூண்டும் வகையில் அமைந்துள்ளது சிப்காட் நிறுவனத்தின் புதிய ரசாயன தொழிற்சாலைகளின் தொடக்கப் பணிகள். அந்நிறுவனம் மீண்டும் புதிதாக தொழிற்பேட்டையில் பெட்ரோ கெமிக்கல் ஆலை, கச்ச எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட ரசாயன தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.

அதற்கான மத்திய, மாநில அரசுகளின் அனுமதிக்கு மனுவும் அளிக்கப்பட்டு, திட்டப்பணிகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அத்திட்டப் பணிகளை முளையிலேயே கிள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், தூத்துக்குடி மக்கள் மற்றும் ஸ்டெர்லைட் போராளிகள் களமிறங்கியுள்ளனர். ஏற்கனவே, சிப்காட் தொழிற்பேட்டையால் தூத்துக்குடியில் பசுமை மண்டல சூழல் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் புதிதாத ரசாயன ஆலைகள் தொடங்குவதற்கு அனுமதி தரக்கூடாது என அவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

அதில் குறிப்பிடும் படியாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக கருதப்பட்ட ஃபாத்திமா பாபு, வழக்கறிஞர் ஹென்றி திபேன் உள்ளிட்ட பலர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். அதற்கு மேலும் உரமிடுவது போல் அமைந்துள்ளது ஸ்டெர்லைட் வல்லுநர் குழு கமிட்டியின் பரிந்துரை. அந்தப் பரிந்துரையில் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பில் பெட்ரோலிய கெமிக்கல் ஆலை அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி கோரிய மனுவின் மீதான பரிசீலனை, மத்திய சுற்றுச்சூழல் கண்காணிப்பக வல்லுநர் குழு கமிட்டியில் மே 26ஆம் தேதி நடந்தது.

தூத்துக்குடியில் மீண்டும் தலை தூக்கும் புதிய ரசாயன தொழிற்சாலை பணிகள்

அதில் வல்லுநர் குழு கமிட்டி தலைவர் தீபக் அருண் ஆப்தே தலைமையில் 16 உறுப்பினர்களை கொண்ட கமிட்டி அமர்வு இதனை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு விவாதம் நடத்தியது. விவாதத்தின் முடிவில் தூத்துக்குடியில் பெட்ரோலிய கெமிக்கல் ஆலை அமைப்பதற்கு நிலம் எடுப்பது தொடர்பான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. மாறாக ஆலை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களையும், நெறிமுறைகளையும் நிறைவேற்ற அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா பாபு, "தூத்துக்குடியில் தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியபுரம், சில்லாநத்தம், உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி சிப்காட் பகுதியில் பெட்ரோலிய கெமிக்கல் ஆலை மற்றும் கச்ச எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் ஏற்கனவே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் அங்கு ரசாயன ஆலை அமைக்கப்பட்டால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் தாங்கு சக்தி முற்றிலும் இழக்கப்படும். குறிப்பாக ஆலை அமைப்பதற்கான விதிமுறைகளையும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வகுத்துள்ளது. அதில் சிவப்பு தொழிற்சாலை என்று சொல்லப்படும் ரசாயன கழிவுகளை வெளியேற்றும் ஆலை அமைக்கப்பட வேண்டும் எனில் அந்த இடத்தில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.

சிவப்பு தொழிற்சாலை என அடையாளம் காட்டப்பட்ட ஆலைகள் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் அமைக்கப்பட வேண்டும். அதேபோல நுண்ணுயிர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியிலிருந்து குறைந்தபட்சம் 15 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் ஆலைகள் அமைக்க வேண்டும்.

ஆனால் தூத்துக்குடியில் அமைக்கவிருப்பதாக விண்ணப்பிக்கப்பட்ட பெட்ரோலிய கெமிக்கல் ஆலை மக்கள் வாழும் கிராமங்கள் அருகிலேயே அமைக்கப்பட உள்ளன. அதுமட்டுல்லாமல் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதியிலிருந்து 9 கி.மீ தொலைவில்தான் ஆலை அமைய உள்ளது.

அதன் அடிப்படையிலேயே நாங்கள் வல்லுநர் குழுவை அணுகினோம். இந்தத் திட்டப் பணிகளை நியாயமான முறையில் வல்லுநர் குழு கையாண்டு அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை" எனத் தெரிவித்தார். இதற்கிடையில் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநர் அனில் அகர்வால், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதும் ஸ்டெர்லைட் போராளிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை அளித்துள்ளது.

அப்படிப்பட்ட சூழலில் ஸ்டெர்லைட் போராளிகள் மீதான பழைய வழக்குகளை காவல்துறை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது சந்தேகத்திற்குரியதாக அமைந்துள்ளது. அதன்படி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் முன்னின்று களப்பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி, தமிழ்மாந்தன், மெரினா பிரபு, வேல்ராஜ், கெபிஸ்டன், குமரெட்டியாபுரம் மகேஷ் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை தூசித்தட்டி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிப்காட் காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தூண்டுதலின் அடிப்படையிலேயே அவ்வழக்குகள் மீண்டும் காவல்துறையினரால் கையிலெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்டெர்லைட் போராளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பின், தூத்துக்குடியில் ரசாயன தொழிற்சாலைக்கு எதிராக வெளிப்படையான போராட்டங்கள் இல்லாவிட்டாலும், உள்ளுக்குள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், பெட்ரோலிய ஆலை அமைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் மீண்டும் உயிரிழப்புகளை ஏற்படுத்துமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே துளிர்விடத் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் படுகொலை : போராட்டம் கடந்து வந்த பாதையும் தொடரும் அடக்குமுறையும்...

Last Updated : Jun 25, 2020, 6:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.