ETV Bharat / state

ஸ்டெர்லைட் படுகொலை : போராட்டம் கடந்து வந்த பாதையும் தொடரும் அடக்குமுறையும்...

author img

By

Published : May 24, 2020, 9:36 AM IST

தூத்துக்குடி : இயற்கை வள பாதுகாப்பின் உலகளாவிய அறப்போருக்கு முன்னுதாரணமான திகழ்ந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

The Sterlite Massacre: The Passage of the Struggle and Continued Oppression
ஸ்டெர்லைட் படுகொலை : போராட்டம் கடந்து வந்த பாதையும் தொடரும் அடக்குமுறையும்...

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை என மனித உரிமை ஆர்வலர்களால் நினைவுகூரப்படும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. மே 22, 2018 அன்று அங்கு நடைபெற்ற படுகொலை, மனித உரிமை மீறல்களுக்கு இன்று வரை நீதி கிடைக்காத அவல நிலையே தொடர்கிறது.

ஏன் போராட்டம் தொடங்கியது ?

நீர், நிலம் காற்று, என தூத்துக்குடியின் சுற்றுச்சூழலை சீரழித்து மக்களை நோய்வாய்ப்படுத்திய வேதாந்தாவின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக 1997 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி அடுத்தக்கட்டதை அடைந்தது.

அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமான கந்தக-டை-ஆக்சைடு எனும் நச்சுவாயு இவ்வாலையில் இருந்து வெளியானதால், ஆலையைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி முதலான பாதிப்புகள் ஏற்பட்டதே மீண்டும் மக்கள் போராட்டம் வீரியமடைய காரணமாக அமைந்தது.

மூடிய ஆலை மீண்டும் திறப்பு!

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை அடுத்து அந்த ஆலை மூடப்பட்டது. இதை எதிர்த்து ஆலை சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி அளித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், விதிமீறல் மீறிய ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, ஆலை தொடர்ந்து இயக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மண்ணையும் மக்களையும் காக்க நடைபெற்ற அறப்போராட்டம்

ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்து வந்த இந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி மக்கள் இத்தொழிற்சாலையை இனியும் தொடர்ந்து செயல்பட்ட அனுமதித்தால் ஒட்டுமொத்த மாவட்டமே மனிதர்கள் உயிர்வாழ தகுதியற்றதாக மாறிவிடும் என்று கூறி தொழிற்சாலையை மூட கோரிக்கை விடுத்தனர். 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 5, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இதனை வலியுறுத்தி கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.

அதனைதொடர்ந்து, 40 நாள்களாக குமரெட்டியார்புரம் மக்கள் தன்னெழுச்சியாக மரத்தடியில் அமர்ந்து போராட்டம் செய்தனர். மார்ச் 25 தேதி அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர். அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் 50,000க்கு அதிகமானோர் கலந்துகொண்டு இத்தொழிற்சாலையை மூடக்கோரி பிரகடனம் செய்தனர்.

100 நாட்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் இந்த அறப் போராட்டத்தை ஆதரித்தனர். அறவழிப் போராட்டத்தின் 100ஆவது நாளை குறிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மே 22ஆம் தேதி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொது மக்கள் பேரணி சென்றனர்.

துப்பாக்கிச் சூடு

இந்த பேரணியில், அசம்பாவிதங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சமூக விரோதிகள் ஊடுருவியதால் வன்முறை ஏற்பட்டதாகவும், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அரசு தரப்பு விளக்கமளித்தது. இந்த துப்பாக்கி சூட்டில் போராட்டத்தை ஒருங்கிணைத்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்னோலின், கிளாஸ்டன், கந்தைய்யா, தமிழரசன், சண்முகம், வெனிஸ்டா, அந்தோணி செல்வராஜ், மணிராஜ், ரஞ்சித் குமார், ஜான்சி, கார்த்தி, காளியப்பன் உள்ளிட்ட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன், செல்வசேகர் 3 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது தமிழ்நாடு காவல்துறையும், துணை பாதுகாப்புப் படையும் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டை சர்வதேச அளவில் ‘தூத்துக்குடி படுகொலை’ என சூழலியல் ஆர்வலர்கள் கூறினர்.

அப்பாவி மக்கள் மீது வழக்கு

அறவழியில் போராடிய மக்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்பு சட்டம் போன்ற பிரிவுகளில் கைது செய்து சிறைப்படுத்தப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டத்தில் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்ததுடன், அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி உத்திரவிட்டது. அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி உத்திரவிட்டது. வழக்கும் மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) விசாரணைக்கு மாற்றப்பட்டது.


தனிநபர் ஆணையம்
மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. மறுபுறமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் சார்பிலும் பல்வேறு சமூகநல ஆர்வலர்கள் சார்பிலும் துப்பாக்கி சூட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் ஒன்றிணைக்கப்பட்டு மத்திய புலனாய்வு முகமை காவல்துறையினரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், மத்திய புலனாய்வு முகமை, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகிய 3 அமைப்புகளில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த விசாரணை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.

இரண்டாம் ஆண்டு நினைவுதினம் - அஞ்சலி செலுத்த கட்டுப்பாடு
இதுவரை இந்த சம்பவம் குறித்து எந்தவொரு விசாரணையும் முடிவுக்கு வராத நிலையில் இன்று (22.5.2020) ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் தங்களின் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக கூறி வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் படுகொலை : போராட்டம் கடந்து வந்த பாதையும் தொடரும் அடக்குமுறையும்...
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலின் தாயார் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் தங்களின் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் சில கட்டுப்பாடுகளை போலீசார் விதித்திருப்பதாக கூறி வருத்தம் தெரிவித்தனர்,

இதுகுறித்து ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் இறந்த பள்ளி மாணவி ஸ்னோலினுடைய தாயார் வனிதா நமது ஈ டி.வி பாரத் செய்திகளுக்கு பேட்டி அளிக்கையில், “துப்பாக்கி சூட்டில் எனது மகள் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அவளுடைய நினைவை அனுசரிக்கும் வகையில் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்குச் சென்று வழிபாடு நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் கல்லறைக்கு சென்று வழிபடுவதற்கு கூட போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். ஆதார் அடையாள அட்டையை காண்பித்து விட்டு தான் கல்லறைக்கு செல்ல வேண்டும் என கூறுகின்றனர்‌ இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த மண்ணுக்காகவும், மக்களின் வாழ்வுக்காகவும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் நீத்த எனது மகளை கல்லறையில் சென்று பார்ப்பதற்கு கூட அனுமதி பெற்று விட்டு தான் செல்ல வேண்டுமா?. வன்முறையை எந்த வகையிலும் தூண்டி விடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கைகளை எடுப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த நினைக்கும் எங்களை காவல்துறை தடுப்பதன் மூலம் வன்முறையை அவர்கள்தான் செய்ய தூண்டுகின்றனர். காயம்பட்ட எங்களின் மீது மேலும் அழுத்தத்தை திணிக்கும்போது தான்‌ வன்முறை உருவாகிறது.

ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்றது. ஆனால் இதுவரை அந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் உயிரிழந்தவர்களை வைத்து எந்த அசம்பாவிதமும் அதன்பிறகு நடக்கவில்லை. ஆனாலும் இவ்வளவு கெடுபிடிகள் உள்ளது வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தில் எங்களுக்கு இதில் நீதி இன்னமும் கிடைக்கவில்லை. மக்களுக்கு நல்லதே நினையுங்கள், நல்லதே செய்யுங்கள்” என்றார்.

பாதுகாப்புப் பணியில் 1000 காவல்துறை
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் தென்மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கூடுதலாக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெற்ற கிராமப் பகுதிகளில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் ஸ்டெர்லைட் போராளிகளை நினைவேந்த பொது இடங்களில் கூட்டம் நடத்தவோ, நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே தடையை மீறி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக தூத்துக்குடி மாநகரப் பகுதி பண்டாரம்பட்டி, குமரெட்டியபுரம், தெற்கு வீரபாண்டியபுரம் பகுதிகளில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிர்சூழல் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்க அறைகூவல்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த தூத்துக்குடி மக்கள் சட்டைகளில் கறுப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு முகக்கவசம் அணிந்தும், வீடுகளில் எதிர்ப்புக் கோலமிட்டும் நினைவேந்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.