ETV Bharat / state

விவசாயிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு.. மணல் கடத்தல்காரர்களின் அட்டகாசம்

author img

By

Published : Apr 30, 2023, 5:42 PM IST

விவசாயிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு.. மணல் கடத்தலின் அட்டகாசம்
விவசாயிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு.. மணல் கடத்தலின் அட்டகாசம்

மணல் கடத்தல் குறித்த வழக்கு தொடுத்ததால் வந்த கொலை மிரட்டலை அடுத்து, புகார்தாரரான தூத்துக்குடி மாவட்ட விவசாயிக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

விவசாயி பாலகிருஷ்ணன் அளித்த பிரத்யேக பேட்டி

தூத்துக்குடி: முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் அளித்ததற்காக மணல் கொள்ளை கும்பலால், சில நாட்களுக்கு முன்பாக அலுவலகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த முறப்பநாட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதுதான், அகரம் என்ற கிராமம். இங்கு வசித்து வரும் விவசாயி பாலகிருஷ்ணன் என்பவர், விவசாயத்துடன் ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார்.

இதனிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினராகவும் பாலகிருஷ்ணன் உள்ளார். இதனையடுத்து அதே ஆண்டு இறுதியில் அகரம் ஊரின் தாமிரபரணி ஆற்றின் கரைப் பகுதியில் மணல் கொள்ளை நடக்கிறது என்றும், அதை ஒட்டியுள்ள சுடுகாட்டிலும் மண்ணைத்தோண்டி எலும்புக் கூடுகள் வெளியே சிதறிக்கிடக்கிறது என்றும் கொடுக்கப்பட்ட தனது வார்டு மக்களின் புகாரை பெற்ற பாலகிருஷ்ணன், இது தொடர்பாக முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், அங்கு நடவடிக்கை எடுக்கப்படாததால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்துள்ளார். இதனால் மணல் கொள்ளையர்களிடம் இருந்து பஞ்சாயத்து உறுப்பினர் பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 14.10.2020 அன்று, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தகட்ட விசாரணைகளில், மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு மணல் கொள்ளையர்களால் கொலை மிரட்டல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீதிபதிகள் புகழேந்தி மற்றும் கிருபாகரன் ஆகிய இருவரும், 19.11.2020அன்று முதல் மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பினை 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என காவல் துறைக்கு பரிந்துரை செய்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆடு மேய்க்கும் விவசாயி பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகிறார். இது குறித்து விவசாயி பாலகிருஷ்ணன் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “தூத்துக்குடி அகரம் பகுதியில் தடுப்பணை என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயில் மண் அள்ளப்படுகிறது. இதனை நான் இரவு, பகல் பாராமல் தடுத்து நிறுத்தினேன்.

அருகில் உள்ள கலியாவூரில் இருந்து மணக்கரை வரை உள்ள இடங்களில் அதிகப்படியான மண் அள்ளப்பட்டது. அதற்கு இங்கு உள்ள மணல் மாஃபியாக்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனைத் தடுக்க உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். ஆகவே, நீதிமன்றம் இரண்டு வருடமாக எனக்குப் போலீஸ் பாதுகாப்பு அளித்தது.

சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக வாழ முடியவில்லை என்று வருத்தமாக உள்ளது. காவல் துறை இல்லை என்றால் என் உயிர் இல்லை. மணல் மாஃபியாக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவில்லை என்றால் இயற்கை அழிந்து விடும். கனிம வளத்தை ஒரு போதும் அழிக்கவிட மாட்டேன். உயிர் உள்ள வரை போராடுவேன்.

வற்றாத இந்த ஜீவநதி தாமிரபரணி நதி வற்றிப்போகும் அளவிற்கு இயற்கை அழிந்து வருகிறது. எனவே, என்ன நடந்தாலும் தமிழ்நாட்டில் எந்த மூலையில் நடந்தாலும் தடுக்கத்தான் செய்வேன். அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரும்புக்கரம் கொண்டு இதனை அடக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.