தூத்துக்குடி: வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமலிங்கம்-பிச்சம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 5 மகள்கள் 4 மகன்கள் உள்ளனர். நேற்று (அக். 1) ராமலிங்கத்தின் 105வது பிறந்தநாளை அவரது மகள்கள், மகன்கள், பேரன்-பேத்திகள், கொள்ளுப் பேரன்-பேத்திகள் மற்றும் எள்ளுப் பேரன்-பேத்திகள் என மொத்த குடும்பத்தினரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்காக பனைமரங்கள் அதிகம் கொண்ட அகரம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மேடையில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட கேக்கை ராமலிங்கத்தின் கையை பிடித்து அவரது மகன் வெட்ட ராமலிங்கம் கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்பியது.
அவருடன் மேடையில் நின்ற மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன்-பேத்திகள் மற்றும் எள்ளுப் பேரன்-பேத்திகள் என அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் வெட்டிய கேக்கை பேரன்மார்கள் நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் பகிர்ந்தளித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து அவரது பிள்ளைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன்-பேத்திகள் மற்றும் எள்ளுப் பேரன்-பேத்திகள் என அனைவரும் ராமலிங்கத்தின் காலில் விழுந்து வணங்கி அவரிடம் ஆசி பெற்றனர். மேலும், இந்த விழாவிற்கு வருகை தந்த உறவினர்கள் அனைவரும் ராமலிங்கத்திற்கு பொன்னாடை அணிவித்து அவரிடம் நல்லாசி பெற்றனர்.
அதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியில் உறவினர்கள், ஊர் பொதுமக்கள், நண்பர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ராமலிங்கத்திடம் ஆசி பெற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்காக அந்த பகுதியிலேயே வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
தற்போது உள்ள இந்த கால கட்டத்தில் உறவுகள் சருகுகள் போல் உதிர்ந்து கொண்டிருக்கும் சூழலில் மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன்-பேத்திகள், எள்ளுப் பேரன்-பேத்திகள் என 5 தலைமுறையினருடன் 105 ஆவது பிறந்த நாளை திருவிழா போல கொண்டாடிய ராமலிங்கத்தின் குடும்பம் ஒரு பொக்கிஷமே என்று பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வாஷிங்டனில் களைகட்டிய உலக கலாச்சார விழா.. 180 நாடுகளை சேர்ந்த 10 லட்சம் மக்கள் பங்கேற்பு!