ETV Bharat / state

“ஊரை விட்டு ஒதுக்கி வச்சுடாங்க.. காலில் விழுந்தால் சேர்த்துப்பாங்களாம்” - கதறும் குடும்பத்தினர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 4:59 PM IST

பாதுகாப்பு வேண்டி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம்  மனு
பாதுகாப்பு வேண்டி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Thiruvarur News: திருவாரூரில் ஊர் பஞ்சாயத்தை மீறி காவல் நிலையத்திற்குச் சென்ற 3 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்

திருவாரூர்: குடவாசல் வட்டத்திற்கு உட்பட்ட அன்னியூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் மைக்கேல் ராஜ். இவரது மனைவி பெரலிஸ் மேரி (70). இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள் உள்ளனர். நான்கு மகள்களுக்கும் திருமணமான நிலையில், 3 மகள்கள் அதே மாதா கோவில் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஒரு மகள் மட்டும் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.

இதில் பெரலிஸ் மேரியின் மூன்றாவது மகளான ஜெனிதா, குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், ஜெனிதா ஊர் பஞ்சாயத்தில் முறையிடாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக ஊர் பஞ்சாயத்து தரப்பைச் சேர்ந்த வாசுவிற்கும், ஜெனிதாவிற்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஜெனிதாவின் கணவர் கணேசன், இது குறித்து வாசுவிடம் கேட்டபோது, கணேசனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து கணேசன் பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், இரு தரப்பினருக்கும் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டதையடுத்து, வழக்குப் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.

இருப்பினும், ஊரை மீறியதால் ஜெனிதா மற்றும் அவரது சகோதரிகள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி ஜெனிதா, அவரது சகோதரிகளான சசிகலா மற்றும் சுனிதா குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அப்போது அங்கு வந்த நாட்டாமை ராஜி ஆல்பர்ட், ராஜா சுப்பிரமணியன், மாதவன், சந்திரசேகர் ஆகியோர், சசிகலாவின் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து முற்றிலுமாக சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

மேலும், ஜெனிதாவின் தங்கை மகளை தாக்கியதுடன், சுனிதாவின் உறவினரான பெர்னாண்டஸ் வீட்டில் உள்ள இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஜெனிதா மற்றும் அவரது சகோதரிகள் வீடியோ ஆதாரங்களுடன் பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

இந்த நிலையில், ஜெனிதா மற்றும் அவரது சகோதரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக இன்று வந்தனர். அப்போது ஜெனிதா கூறுகையில், “அந்த ஊரில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஊரில் எங்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றால், 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் கட்டி பத்து முறை காலில் விழ வேண்டும் என்கிறார்கள்.

காவல்துறையால் எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. கடந்த 10 நாட்களாக உறவினர்கள் வீட்டில் தங்கி உள்ளோம்” என கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார். பின்னர், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுகொடுத்ததை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததையடுத்து, அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: "கருணாநிதி நாடு என்று கூட தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டிவிடுவார்கள்" - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.