ETV Bharat / state

Bike stunt: 3 கி.மீ., தூரம் பைக்கில் ஏறி நின்று சாகசம் செய்து அச்சுறுத்திய இளைஞரால் பரபரப்பு

author img

By

Published : Aug 2, 2023, 3:21 PM IST

திருவாரூரில் 3 கிலோமீட்டர் தூரம் இளைஞர் பைக்கில் ஏறி நின்று சாகசம் செய்து அச்சுறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

3 கி.மீ., தூரம் பைக்கில் ஏறி நின்று சாகசம் செய்து அச்சுறுத்திய வாலிபரால் பரபரப்பு

திருவாரூர்: மாணவர்கள், இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவது தற்போது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதுவும் இரவு நேரங்களில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் இளைஞர்கள் கெத்து காட்ட வேண்டும் என்பதற்காக பைக்கில் சாகசம் செய்து வருகின்றனர்.

பலர் கை, கால்களை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றம் வரை சென்று ஜாமீன் பெறும் இவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் குறிப்பாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை உட்கொண்டு இளைஞர்களின் சேட்டை சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் புலிவலம் என்கிற இடத்தில் ஒரு பைக்கில் இரண்டு இளைஞர்கள் பயணம் செய்தனர்.

அதில் பின்பக்கம் இருக்கும் இளைஞர் சென்று கொண்டிருக்கும்போது பைக்கில் எழுந்து நின்று சாகசம் செய்து கொண்டே சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள மாங்குடி வரை சென்றார். இதனால் எதிரே வந்த வாகன ஓட்டிகளும் பின்புறம் வந்தவர்களும் கடும் அச்சம் அடைந்தனர்.

மேலும் சாகசம் செய்யும் இளைஞர் தடுமாறி விழுந்தால் என்ன ஆகும்? என்று அச்சமும் பீதியும் அடைந்தனர். ஒருகட்டத்தில் பின் தொடர்ந்து சென்றவர்கள் சிலர் வீடியோ எடுத்ததைக் கண்ட அந்த இரு இளைஞர்களும் வாகனத்தை வேறு திசையில் செலுத்தி அங்கிருந்து தப்பினர்.

இந்த நிலையில் எந்தநேரமும் போக்குவரத்து அதிகளவில் இருக்கும் இந்த சாலையில் அடிக்கடி தினந்தோறும் விபத்துகள் நடந்து வரும் சூழ்நிலையில் இன்று இந்த இளைஞர்கள் செய்த காரியம் கண்டிக்கத்தக்கது. இதனைக் கண்டித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி இந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய அறிவுரை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஆன்லைன்ஆப் மூலம் கடன்... வாட்ஸ்அப்பில் வந்த ஆபாச போட்டோ.. இளைஞர் தற்கொலை செய்த சோகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.