ETV Bharat / state

மலை வளத்தை பாதுகாக்க முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

author img

By

Published : Nov 8, 2021, 12:12 PM IST

பி ஆர் பாண்டியன்
பி ஆர் பாண்டியன்

மேற்கு தொடர்ச்சி மலை வளத்தை பாதுகாப்பது தொடர்பாக செயல்திட்டம் உருவாக்குமாறு தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி திருப்பதியில் தென்மாநில முதல்வர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இம்மாநாடு தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த ஒத்த கருத்தை உருவாக்க முன்வரவேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை முழுமையாக மதித்து செயல்படுவதற்கான நடவடிக்கையை உறுதிப்படுத்திட இக்கூட்டத்தில் தமிழ்நாடு வலியுறுத்தவேண்டும்.

தென் மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே நீர் ஆதார பிரச்னைகளில் அண்டை மாநிலங்களை முழுமையாக நம்பி உள்ளது. எனவே இம்மாநாடு இதற்கு தீர்வுகாண முழு ஒத்துழைப்பு தர அரசு கோர வேண்டும்.

குறிப்பாக கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரும் பேரழிவைச் சந்திக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது, ஓரிரு மாதங்கள் பெய்ய வேண்டிய பருவ மழை ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்க்கிறது.

இதனால் ஆண்டுதோறும் பேரழிவு ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. பேரழிவுக்காக விவசாய உற்பத்தியை விவசாயிகள் நிறுத்த முடியாது. எனவே, பாதிப்புகளுக்கேற்ப உரிய இழப்பீடு வழங்க மத்திய அரசு பேரிடர் மேலாண்மை நிதியைக் கூடுதலாக ஒதுக்க முன்வரவேண்டும்.

குறிப்பாக காப்பீடு திட்டத்தில் தற்போதைய பேரழிவிற்கு ஏற்ப இழப்பீடு குறித்து முடிவு எடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை விவசாயிகள் நலன் கருதி மாற்றம் கொண்டு வர வலியுறுத்த வேண்டும். மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களின் பருவகால மாற்றங்களுக்கேற்ப தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அனுமதி பெற வேண்டும்.

ஒன்றிய அரசு ரபி, காரிப் பருவம் என்கிற இரு பருவகால சாகுபடி கொள்கைகளை இந்தியா முழுவதும் நிறைவேற்றி வருவது பொருத்தமில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்குகிறது.

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படி அன்று முதல் காரீப் பருவ சாகுபடி (கோடை பருவம்) அமல்படுத்தப்படுகிறது. கொள்முதல் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுவதில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பட்ட நிர்வாக நடைமுறை ஏற்படுகிறது.

அக்டோபர் தமிழ்நாட்டிற்குக் காரிப் பருவம் என்பது பொருத்தம் இல்லை என்பதை ஒன்றிய அரசுக்கு எடுத்துரைத்து தமிழ்நாட்டின் பருவகாலத்திற்கேற்ப கொள்கை மாற்றம் காண முதலமைச்சர் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

பருவ நிலை மாற்றத்திற்கு அடிப்படை மேற்குத் தொடர்ச்சி மலை அழிவு முதன்மையான அடிப்படைக் காரணமாக உள்ளது. எனவே, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் ஒட்டிய பகுதியில் வனப்பரப்பை விரிவுபடுத்துவதற்கும், மரங்களை வளர்ப்பதற்கும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும், வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் ஒருங்கிணைந்த செயல் திட்டம் உருவாக்கவேண்டும்.

அதற்கான செயல் திட்டத்தை இம்மாநாடு அவசர காலமாக உருவாக்க முன்வரவேண்டும். அதற்கான வகையில் உரிய செயல் திட்டங்களை வன உயிரினம் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், ஆய்வாளர்களோடு கலந்து பேசி உரிய செயல் திட்டங்களை தயார் செய்து, அதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் முன்மொழிந்து நிறைவேற்றுவதற்கு உரிய ஆதரவைப் பெற வேண்டும் என விவசாயிகள் சார்பில் வலியுறுத்துகிறேன்," எனக் கூறினார்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 வாகனங்கள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.