ETV Bharat / state

61 வயதில் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்த முன்னாள் மாணவர்கள்: 2 லட்சம் பொருட்களை வழங்கி பள்ளிக்கு உதவிக்கரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 4:31 PM IST

61 வயதில் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்த முன்னாள் மாணவர்கள்
61 வயதில் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்த முன்னாள் மாணவர்கள்

திருவாரூரில் 67ஆண்டுகளாக இயங்கிவரும் அரசு உதவிப்பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1977 - 1978 பேட்ஜ் மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். அப்போது, பள்ளிக்கு 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

61 வயதில் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்த முன்னாள் மாணவர்கள்

திருவாரூர்: திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட காரைக்காட்டுத் தெருவில் அரசு உதவி பெறும் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1956 முதல் 67 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1977 - 78 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் ஓல்டு எஸ்எஸ்எல்சி-யில் 30 மாணவிகள் படித்துள்ளனர். அந்த மாணவிகள் தற்போது பல்வேறு அரசு மற்றும் தனியார்த் துறைகளில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்களாகவும், இல்லத்தரசிகளாகவும் சென்னை, புனே, பெங்களூர், தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மாணவிகளில் ஒருவரான விஜய ரேகா மற்றும் உமா ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் 18 மாணவிகளைக் கண்டறிந்து ஜிஆர்எம் கண்மணிகள் என்கின்ற குழு மூலம் அவர்களது பழைய பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த அவர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்க வேண்டும் என்கின்ற முடிவுடன் ஒரே மாதிரியான உடையில் பள்ளிக்கு வருகை தந்தனர்.

இதனையடுத்து பள்ளிக்குச் சென்ற முன்னாள் மாணவிகளைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் செயலர் ஆகியோர் வரவேற்றனர். அவர்களிடம் முன்னாள் மாணவிகள் 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நாப்கின் எரியூட்டும் கருவி மற்றும் பர்னிச்சர் போன்றவற்றை வாங்குவதற்கான காசோலையையும் 5000 ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் படித்த வகுப்பறைக்குச் சென்ற மாணவிகள் பள்ளிப் பருவத்திற்கே சென்று அங்கு உள்ள பலகையில் அமர்ந்து பேசி மகிழ்ந்ததுடன் பாடல்கள் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பள்ளி வளாகம் மற்றும் அவர்கள் தங்கிப் படித்த விடுதி போன்றவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் போக மனம் இல்லாமல் பள்ளியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

மேலும் இது குறித்து முன்னாள் மாணவி விஜய ரேகா கூறுகையில், "எங்களுக்குக் கல்வி கொடுத்த இந்த பள்ளிக்கு நாங்கள் குறைவாகத்தான் உதவி செய்திருக்கிறோம். எங்களைப் பார்த்து மற்ற முன்னாள் மாணவிகளும் இதுபோல் உதவ வேண்டும் என்கின்ற நோக்கத்தில் தான் இந்த உதவியைச் செய்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: உச்சம் தொட்ட முட்டை விலை.. 50 ஆண்டுகால வரலாறு காணாத உயர்வுக்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.