ETV Bharat / state

திருவாரூரில் காலை முதல் மிதமான மழை.. விவசாயிகள் மகிழ்ச்சி..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 5:54 PM IST

திருவாரூரில் காலை முதல் வலுக்கும் மழை.
திருவாரூரில் காலை முதல் வலுக்கும் மழை.

Thiruvarur Rain: திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழைபெய்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்று சுழற்சி நீடித்து வருவதால் ஜன 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதனை அடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.6) முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று (ஜன.7) காலை முதல் மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக விளமல் கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், நன்னிலம், சேந்தமங்கலம், கொல்லுமாங்குடி, பூந்தோட்டம், திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

இதையும் படிங்க: உருவ கேலி செய்தோருக்கு நெத்தி அடி கொடுத்த திருவாரூர் இளைஞர்.. 24 மணி நேரம் தண்ணீரில் மிதந்து சாதனை முயற்சி!

தொடர்ந்து, பெய்து வரும் இந்த மழையால் இன்று (ஜனவரி 07) ஞாயிற்றுக்கிழமை காய்கறி, இறைச்சி வாங்கச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதே போல, சாலையோர வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வந்த நிலையில், ஆற்றில் தண்ணீர் இல்லாமல் பயிர் கருகும் சூழல் நிலை வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது, பெய்து வரும் இந்த மழை, நெற்பயிர்களுக்கு ஊட்டமளிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், இந்த மழை தொடர்ந்து பெய்தால், சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர். இந்த தொடர் மழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்து உள்ளது.

இதையும் படிங்க: பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஊழல் புகார் - பிஆர் பாண்டியன் வேளாண் அதிகாரியிடம் முறையீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.