பேருந்து நிலையத்தில் இருந்த பொருள்களை சேதப்படுத்திய இளைஞரை வெளுத்து வாங்கிய பொது மக்கள்!

author img

By

Published : Aug 15, 2021, 1:23 AM IST

திருவண்ணாமலை

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் கட்டையை கொண்டு, நடைமேடையில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கும், கிரிவலம் செல்வதற்காகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலை வந்து செல்கின்றனர். இங்கு வருபவர்கள் பேருந்து போக்குவரத்தையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இதனால், திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் நேற்று (ஆக.13) வேலூர் செல்லும் நடைமேடையில் கொய்யாபழம் விற்கும் பெண்ணிடம் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் திடீரென தகராறில் ஈடுப்பட்டார்.

அப்போது, அந்த வாலிபர் தன் கையில் உருட்டுக்கட்டை எடுத்து தாக்குதல் நடத்த முயன்றார். அவரிடமிருந்து அப்பெண் தப்பி ஓடினார். மேலும், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்கள், குழந்தைகளும் அவரைப் பார்த்து பயந்து ஓடியுள்ளனர். அந்த இளைஞர் அருகில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கியுள்ளார். பின்னர் தகராறில் ஈடுப்பட்ட இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் பரவல்

இச்சம்பவத்தை பஸ் நிலையத்தில் இருந்த நபர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து அந்த வாலிபரை மீட்டு, வாலிபரையும், அவரது தாயாரையும் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

வைரலான காணொலி
மனநலம் பாதிக்கப்பட்டவர்
காவல்துறையின் விசாரணையில், அந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பதும், திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள அப்பா மனநல மருத்துவமனையில் கடந்த ஆறு மாத காலமாக மனநல சிகிச்சை எடுத்து வந்ததும், மனநல சிகிச்சைக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு அவரை அழைத்துக்கொண்டு சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக பெங்களூரிலிருந்து திருவண்ணாமலைக்கு அவரை, அவரது தாயார் அழைத்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகன் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் திடீரென கொய்யாப்பழம் விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் தகராறு செய்து ரகளை செய்துள்ளார் என்று அவரது தாயார் கூறியுள்ளார்.

இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதனை காவல்துறையினர் உறுதிசெய்த பின்னர், அந்த வாலிபரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இதையும் படிங்க: கேஎல் ராகுல் மீது பீர் பாட்டில் மூடிகள் வீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.