ETV Bharat / state

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படப்பிடிப்பில் களேபரம்.. திருவண்ணாமலையில் என்ன நடந்தது?

author img

By

Published : Mar 20, 2023, 8:40 AM IST

Updated : Mar 20, 2023, 11:13 AM IST

Etv Bharat
Etv Bharat

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் படப்பிடிப்பின் போது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பவுன்சர்கள் பொதுமக்களை தாக்கியதாக எழுந்த புகாரில் மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படப்பிடிப்பில் களேபரம்! என்ன நடந்தது?

திருவண்ணாமலை: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ஒரு திரைப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் படமாக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு மேலும், 2 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் குவிந்துள்ளனர். இவர்களது பாதுகாப்புகாக பவுன்சர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர். படப்பிடிப்புக்காக திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டு, சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இணை சார் பதிவாளர் அலுவலகம் செல்லும் பாதையில் இருந்த பெட்டிக் கடைகள் அகற்றப்பட்டது. படப்பிடிப்பு நடைபெறும் தகவல் பரவியதால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு பொதுமக்கள் திரண்டனர்.

அப்போது பொதுமக்கள் படப்பிடிப்பு காட்சிகளை தங்களது செல்போன்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். இதையறிந்த பவுன்சர்கள் பொதுமக்களிடம் இருந்து செல்போன்களை பறித்து, அதில் பதிவாகி இருந்த புகைப்படங்களை அழித்து அடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி கிடையாது என்றும், மீறினால் செல்போன்களை பறிமுதல் செய்வோம் எனவும் அங்கிருந்த உள்ளூர் இடைத்தரகர்கள் மூலம் மிரட்டல் விடுத்ததாக தெரியவருகிறது.

இவ்வாறு, பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்தினால் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத்தான் செய்வோம் எனவும் வேண்டுமெனில், உள் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி கொள்ளுங்கள் என இதற்கு பொதுமக்களும் பதிலடி கொடுத்துள்ளனர். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலக நுழைவுப்பாதையில் கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத வகையில் பவுன்சர்கள் இருந்தனர்.

இதனால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விடுதிகளுக்கு செல்ல முடியாமல் மாணவிகள் தவித்தனர். இதேபோல், வட்டாட்சியர் அலுவலகம், இ-சேவை மையத்தை தேடி வந்த மக்களும், ஊழியர்களும் அவதிப்பட்டனர். முன்னதாக, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே வட்டாட்சியர் அலுவலக கதவுகளை மூட முயன்றதால், அங்கு உழவர் சந்தைக்கு சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டனர்.

பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகள், கோயில் விழா மற்றும் படப்பிடிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தும்போது, மக்களின் அன்றாட வாழ்வில் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என நீதிமன்றம் கூறுகிறது. ஆனால், படப்பிடிப்பு என்ற பெயரில் வட்டாட்சியர் அலுவலக வளாகம் உள்ளே மக்களை செல்லவிடாமல் கயிறு கட்டி தடுப்பது, படம் எடுக்கும் மக்களின் செல்போன்களை பவுன்சர்கள் பறிப்பது என்பது சட்ட விதிகளை மீறிய செயல் எனப் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகையை திடீரென மாற்றியதால், பணியில் இருந்த அதிகாரிகளை தேடிவந்த மக்கள் குழப்பமடைந்தனர். மக்களின் வாழ்வாதாரமாக உள்ள வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலக வளாகத்தில் இவ்வாறு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்குவதை மாவட்ட நிர்வாகம் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் மந்தாகினிக்கு ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலமைச்சர் பயோபிக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும் - வடிவேலு

Last Updated :Mar 20, 2023, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.