திருவண்ணாமலை திருவிழா: பக்தர்களுக்கு தீபம் பார்க்க நிபந்தனை!

author img

By

Published : Dec 2, 2022, 5:17 PM IST

திருவண்ணாமலை தீபத்திருவிழா: பக்தர்களுக்கு தீபம் பார்க்க நிபந்தனை

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாள் 6ஆம் தேதியன்று அண்ணாமலையார் மலையின் மீது தீபம் பார்க்க நண்பகல் 2 மணி வரை 2500 பக்தர்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை: இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’அண்ணாமலையார் திருக்கோயிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது. வருகின்ற 6ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்; அதன்பின், மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

குறிப்பாக 6ஆம் தேதி அண்ணாமலையார் மலையின் மீது பக்தர்கள் சென்று உச்சியில் உள்ள தீப கொப்பரையில் நெய் காணிக்கை செலுத்துவார்கள். மேலும் பக்தர்கள் மாலை அணிந்து 10 நாட்கள் விரதம் இருந்து மலையின் மீது ஏறி நெய் காணிக்ககை செலுத்தி, கார்த்திகை தீபத்தினை தரிசித்து பின்னர் மாலையைக் கழற்றுவார்கள்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாகவே அண்ணாமலையார் மலையின் மீது பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வந்தது. இதன் பின்னர் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என 2500 பக்தர்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருக்கார்த்திகையன்று, காலை 6 மணிக்கு அரசு கலைக்கல்லூரியில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் நண்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையின் மீது ஏற அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் தண்ணீர் பாட்டிலை தவிர்த்து, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜொலிக்கும் சென்னை ரிப்பன் மாளிகை! காரணம் இதுதானா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.