ETV Bharat / state

சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்கள்.. பக்ரீத் பண்டிகையன்றும் தொடரும் சோகம்..!

author img

By

Published : Jun 29, 2023, 10:35 PM IST

பக்ரீத் பண்டிகையன்றும் சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்கள்
பக்ரீத் பண்டிகையன்றும் சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்கள்

திருவண்ணாமலையில் இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மோதல் காரணமாக இரண்டு வருடங்களாக சாலையில் தொழுகை மேற்கொள்ளும் அவல நிலை நீடிப்பதாக ஒரு பிரிவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பக்ரீத் பண்டிகையன்றும் சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்கள்

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட தரடாபட்டு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் வசித்து வருகிறார்கள். அதே கிராமத்தைச் சேர்ந்த இணையத்துல்லா என்பவர் கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார்.

இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது, ஊராட்சி நிதி சுமார் 25 லட்சம் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டு, காசோலையில் கையொப்பமிடும் உரிமையை இவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த தொகையை இவர் திருப்பி செலுத்தியுள்ளார்.

இந்த நிதி மோசடி தொடர்பாக இணையத்துல்லா தரப்புக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சையத் கவுஸ் தரப்புக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வந்தது. இந்த மோதலினால் இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் பள்ளிவாசல் மற்றும் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தொழுகை செய்ய ஒற்றுமை இன்றி பிரச்னையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது குறித்து திருவண்ணாமலை கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினர் உள்ளடங்கிய அமைதிக் கூட்டம் நடைபெற்றது. அந்த அமைதிக் கூட்டத்தில் ஒரு தரப்பினர் பள்ளிவாசலிலும், மற்றொரு தரப்பினர் ஈத்கா மைதானத்திலும் தொழுகை செய்ய கோட்டாட்சியர் அறிவுறுத்தி சமாதானம் செய்து வைத்தார். இந்நிலையில் இணையதுல்லா தரப்பினர், சையது கவுஸ் தரப்பினரை ஜமாத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.

இதனால் கடந்த இரண்டு வருடங்களாக ரம்ஜான் மற்றும் பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகள் மற்றும் தொழுகையின் போதும் தொழுகை செய்ய முடியாத நிலை சையத் கவுஸ் தரப்பினருக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக பலமுறை இருதரப்பினருக்கும் இடையே முட்டல், மோதல் நிகழ்ந்துள்ளது. அவ்வப்போது காவல் துறையினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு கலவரம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையான ஒன்று.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பள்ளிவாசல் மற்றும் ஈத்கா மைதானத்தில் தொழுக முடியாமல் சையத் கவுஸ் தரப்பினர் சாலைகளில் பாய்கள் விரித்து தொழுகை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இன்று (ஜூன் 29) பக்ரீத் பண்டிகையையொட்டி, சையத் கவுஸ் தரப்பினர் பள்ளிவாசல் மற்றும் ஈத்கா மைதானத்தில் தொழுகை செய்வதற்கு இணையதுல்லா தரப்பினர் மறுக்கவே, சையத் கவுஸ் தரப்பினர் சாலைகளில் பாய்கள் விரித்து தொழுகை செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரண்டு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்படும் என்று கருதிய காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.