ETV Bharat / state

’ஓர் ஆயிரம் நிலவே வா’ பாணியில் தமிழ் குறித்து பாடிய அமைச்சர் எ.வ.வேலு

author img

By

Published : Jan 23, 2023, 9:58 AM IST

அருணை தமிழ் சங்கத்தின் சார்பாக தமிழர் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு, ஓர் ஆயிரம் நிலவே வா பாணியில் தமிழுக்காக தான் இயற்றிய பாடலை பாடினார்.

’ஓர் ஆயிரம் நிலவே வா’ பாணியில் பாடிய எ.வ.வேலு!
’ஓர் ஆயிரம் நிலவே வா’ பாணியில் பாடிய எ.வ.வேலு!

திருவண்ணாமலையில் அருணை தமிழ் சங்கத்தின் சார்பாக தமிழர் திருவிழா நிகழ்வு நேற்று (ஐன.22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றனர்.

அருணை தமிழ் சங்கத்தின் சார்பாக தமிழர் திருவிழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “தொல்காப்பியத்தை படித்தால் மட்டுமே தமிழ் உணர்வு இருக்கும் என்று பொருள் அல்ல. காலத்துக்கு ஏற்ப தமிழ் உணர்வு இருக்க வேண்டும். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட முத்தமிழ்களிலும் புலமை பெற்றவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

அருணை தமிழ் சங்கத்தின் சார்பாக தமிழர் திருவிழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

என்னைப் போன்றவர்கள் கருணாநிதியிடம் ஈர்ப்பு ஏற்பட்டது, இந்த உணர்வால்தான். தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தவுடன்தான், பிறந்த மண்ணுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டி சட்டத்தை இயற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை. தமிழ்நாடு என்று பெருமை பெற்றதற்கு காரணம் அண்ணாதான்.

இவரைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பேருந்துகளில் திருவள்ளுவரின் திருக்குறளை எழுத ஆணையிட்டவர். கருணாநிதி ஆட்சியில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழின் வரலாற்றை அடையாளப்படுத்தும் விதமாக, கீழடியில் தொல்லியல் துறையின் சார்பில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கருணாநிதி ஆட்சியில்தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து என்று மத்திய அரசு வழங்கி உள்ளது. தமிழ் மொழியில் பல்வேறு விருதுகளை தற்போது திமுக அரசு வழங்கி வருகிறது. தமிழர்களுடைய நூல்களை நாட்டுடைமை ஆக்கியதும் திமுக அரசுதான்” என்றார். மேலும் தமிழுக்காக தான் இயற்றிய பாடல் வரிகளை ‘ஓர் ஆயிரம் நிலவே வா’ என்ற மெட்டின் மூலம் அமைச்சர் எ.வ.வேலு பாடினார்.

இதனையடுத்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “வாழ்வியலுக்கு இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் மொழி. குறிப்பாக பழமை வாய்ந்த அனைத்து மொழிகளை விட வல்லினம், மெல்லினம், இடையினம் என்று இந்த மூன்று இனமும் இணைந்து இருப்பதுதான் தமிழ் என்ற சொல். தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் ஒரு சாபக்கேடு, தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வருகிறது.

தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் வரலாற்றையும் மற்றும் தமிழ் மொழியின் வரலாற்றை எப்பொழுது எடுத்து சொன்னாலும், யாராவது ஒருவர் இதெல்லாம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பும் நிலையே தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவி வருகிறது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு என்று சொன்னால் கூட கேள்விக்குரல் எழுப்பக்கூடிய ஒரு காலகட்டத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ் மொழி என்பது மற்ற மொழிகளில் இருந்து வந்தது இல்லை. தமிழ் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட மொழி” என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மறைமலர் அடிகளார் விருது, முத்துலட்சுமி அம்மையார் விருது, கலைவாணர் விருது, கிருபானந்த வாரியார் விருது மற்றும் அருமை தமிழ் சங்கம் சார்பில் பொங்கலையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதையும் படிங்க: காலில் விழாமல் ஓட்டு எப்படி கிடைக்கும்.? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.