ETV Bharat / state

"இறந்த யானைக்கு மணிமண்டபம் கட்டுவது தேவையற்றது" - விஷ்வ இந்து பரிஷத்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 12:38 PM IST

vhp
இறந்த யானைக்கு மணிமண்டபம் கட்டுவது தேவையற்றது -விஷ்வ இந்து பரிஷத்

அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல், இறந்த யானைக்கு மணிமண்டபம் கட்டுவது தேவையற்றது என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் 49 லட்சம் ரூபாய் செலவில் இறந்த யானைக்கு மணி மண்டபம் கட்டுவது எந்த வகையில் நியாயம் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும், பவுர்ணமி நாளை தவிர்த்து பிற நாட்களில் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட நிலையங்கள் மூடி கிடப்பதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அடிப்படை வசதி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் என்றும் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வழிவகை செய்திட வேண்டும் என்றும் விஷ்வ இந்து பரிஷத் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சங்கத்தின் சார்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட செயலாளர் ஏழுமலை பேசுகையில், "அண்ணாமலையார் கோயிலில் இதுவரை மூன்று யானைகள் இறந்து உள்ள நிலையில் தற்போது நான்காவது யானையாக ’ருக்கு’ இறந்து விட்டது. இதற்கு மட்டும் ஏன் 49 லட்ச ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்?.

அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பக்தர்களுக்கான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவை அனைத்து நாட்களும் கிடைக்க வழிவகை செய்திட வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இறந்த யானை ருக்குவுக்கு 49 லட்ச ரூபாய் செலவில் மணிமண்டபம் தேவையா? பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தாமல் இது போன்று கோயில் வருமானத்தை வீணடிப்பதா?. மேலும் மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டது, பக்தர்களிடையே வருத்தத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக கோயிலில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் முன்பாக இந்த பலி பீடங்களுக்கு பூஜை செய்வது வழக்கமான ஒன்றக இருந்து வருகிறது. ஆனால் இதனை அண்ணாமலையார் திருக்கோயில் சிவாச்சாரியார்கள் கூட கண்டு கொள்ளமல் இருப்பது வருத்தமளிக்கிறது. மிக விரைவில் இந்த பலி பீடங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பவுர்ணமி நாளை தவிர்த்து பிற நாட்களில் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட நிலையங்கள் மூடி கிடப்பதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அடிப்படை வசதி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வழிவகை செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறைக்கு திருவண்ணாமலை விஷ்வ இந்து பரிஷத் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்" என்று தெரிவித்தார்

இதையும் படிங்க: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு கருத்து.. ஆன்மீக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.