ETV Bharat / state

திருவண்ணாமலை தீபத்திருவிழா; கிரிவலப்பாதையில் அலைமோதும் மக்கள் கூட்டம்

author img

By

Published : Dec 6, 2022, 4:07 PM IST

கிரிவலப்பாதையில் அலைமோதும் மக்கள் கூட்டம்
கிரிவலப்பாதையில் அலைமோதும் மக்கள் கூட்டம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்ரா பௌர்ணமி மற்றும் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி கிரிவலம் மற்றும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது.

இது போன்ற விழாக்காலங்களில் வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து, 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த்தொற்று காரணமாக கார்த்திகை தீபத் திருவிழா பொதுவெளியில் நடைபெறாமல், பக்தர்கள் இன்றி, அண்ணாமலையார் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் நடைபெற்றது. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டதால் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்களுடன் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருவிழா தொடங்கி ஒன்பது நாட்கள் முடிந்து பத்தாவது நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலின் கருவறை முன்பாக அதிகாலை 4 மணிக்கு, 5 மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்தப் பரணி தீபத்தினை அம்மன் சந்நிதி, விநாயகர் சந்நிதி, முருகர் சந்நிதி உள்ளிட்ட கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் கொண்டு சென்று தீபம் ஏற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று மாலை கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் சரியாக 6 மணிக்குப் பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்ட 4,500 கிலோ நெய் மற்றும் 1,100 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை தீபமானது ஏற்றப்பட உள்ளது.

கார்த்திகை தீப தரிசனத்தைக் காண சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரக்கூடும் என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி, பேருந்து வசதி, அன்னதான வசதி, சிறப்பு ரயில் வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கிரிவலப்பாதையில் அலைமோதும் மக்கள் கூட்டம்

மேலும் திருவண்ணாமலைக்கு வருகை புரியும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் தலைமையில் 4 டி.ஐ.ஜி, 27 எஸ்.பி உள்ளிட்ட 12,000 காவல் துறையினர், அண்ணாமலையார் கோயில் மற்றும் 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிவலம் மேற்கொண்டு வரும் பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை தீபம்: மலையேற பாஸ் முடிந்ததால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.