திருவள்ளூரை அடுத்த ஆவடியைச் சேர்ந்த பூபாலன் என்பவர், முன்விரோதம் காரணமாக பிரேம்குமார் என்பவரை, தனது நண்பர்களோடு சேர்ந்து 2008ஆம் ஆண்டு கொலை செய்தார். இந்நிலையில் பூபாலனை பழிக்குப்பழி வாங்க முடிவு செய்த பிரேம்குமாரின் நண்பர்களான, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த நாராயணன், செல்வேந்திரன், சுரேஷ், மகேந்திரன் ஆகியோர் பூபாலனிடம் நெருக்கமாக பழகிவந்துள்ளனர்.
2010ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி, அந்த நான்குபேரும் பூபாலனை மது அருந்துவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். அதனைக் கண்ட பூபாலனின் சகோதரர் தங்கராஜ் சந்தேகத்தின் பேரில் பின் தொடர்ந்து சென்று பார்த்துள்ளார். அப்போது பட்டாபிராம் அடுத்த கோபாலபுரம் பகுதியில், கத்தியால் வெட்டுப்பட்ட காயங்களுடன் பூபாலன் பிணமாகக் கிடப்பதைக் கண்டார். இதனையடுத்து தங்கராஜ் அளித்த புகாரின்பேரில், பட்டாபிராம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கானது திருவள்ளூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தீப்தி அறிவுநிதி, கொலைக் குற்றவாளிகளான நாராயணன், செல்வேந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் ஆறு மாதம் கூடுதல் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குற்றவாளிகள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: நெல்லை மேயர் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது!