காவல் துறையினர் மீது அவதூறு பரப்ப வேண்டாம்: எஸ்பி வருண்குமார் வேண்டுகோள்

author img

By

Published : Jan 14, 2022, 5:26 PM IST

sp varun kumar

திருவள்ளூரில் பாபு என்பவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் சமயத்தில் காவல் துறையினரால் தான் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் என அவதூறு பரப்ப வேண்டாம் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர்: திருத்தணியில் இயங்கி வரும் கூட்டுறவு பண்டகசாலையில், கடந்த நான்காம் தேதி அன்று நந்தன் என்பவர் தமிழ்நாடு அரசு வழங்கிய பரிசு தொகுப்பை பெற்றுச் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஏழாம் தேதி பிற்பகல், கூட்டுறவு பண்டக சாலைக்கு வந்து அங்குள்ள விற்பனையாளர் சரவணனிடம் தனக்கு வழங்கப்பட்ட பரிசு தொகுப்பு புளி பாக்கெட்டில் பல்லி இறந்து கிடந்ததாக மொபைல் போனில் ஒரு புகைப்படத்தை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

விசாரணைக்கு உத்தரவு

அப்போது விற்பனையாளர் சரவணன், அந்த புளி பாக்கெட்டை கொண்டுவரும்படி கேட்டபோது, அதைக் கொண்டு வராமல் புகைப்படத்தை மட்டுமே ஆதாரமாக வைத்து பேசியதாக கூறப்படுகிறது.

எஸ்பி வருண்குமார்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து கோட்டாட்சியர் விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.

விசாரணையின் அடிப்படையில் நந்தன், தமிழ்நாடு அரசு மீது அவதூறு பரப்புவதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது திருத்தணி காவல் துறையினர், பண்டக விற்பனையாளரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுமக்கள் முன்னிலையில் அரசு வழங்கிய பொருள் குறித்து அவதூறு பரப்பியதாக சட்டபிரிவு 341, 505ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இந்நிலையில் நந்தன் மகன் பாபு என்கிற குப்புசாமி என்பவர் கடந்த 11ஆம் தேதி தற்கொலைக்கு முயன்று 70 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது தந்தை நந்தன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக குப்புசாமி தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி வருண்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”புளி பாக்கெட்டில் பல்லி இருந்த விவகாரத்தில் கோட்டாட்சியரின் விசாரணை அடிப்படையில் நந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

வேண்டுகோள்

விசாரணையும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு, முறையாக நந்தன் காவல் துறை வாகனத்தின் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது மகன் குப்புசாமி 70 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் அவருக்கு பல்வேறு குடும்ப பிரச்சினைகள் உள்ளது தெரியவந்துள்ளது. அவருடைய தற்கொலைக்கான காரணம் விசாரணை முடிந்த பின்னரே முழுமையாக தெரிய வரும்.

அதுவரை இந்த விஷயத்தில் காவல் துறையினரை தொடர்புபடுத்தி யாரும் வதந்தி பரப்ப வேண்டாம், காவல் துறை நந்தன் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்யவில்லை” என மாவட்ட எஸ்பி வருண்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: உற்சாகமாக பொங்கல் கொண்டாடிய காவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.