ETV Bharat / state

கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் மீது கொலைவெறி தாக்குதல் - ஆந்திர இளைஞர்கள் கைது

author img

By

Published : Sep 4, 2022, 9:45 PM IST

Etv Bharat
Etv Bharat

திருத்தணியில் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவர்களை காவல் துரையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நேற்று (செப்.3) இரவு பத்து மணியளவில் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனத்திற்காக வருகை தந்திருந்ததனர். இரவு பத்து மணிக்கு மேல் சாமி தரிசனம் செய்ய மலை ஏறுவதற்கு அனுமதி கிடையாது என்பதால் கோயிலின் காவல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை.

ஆனால், அவர்கள் அதை பொருட்படுத்தாமல் கோயிலின் மேலே சென்று வாகனம் நிறுத்தும் இடத்தில் தங்கியுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த திருக்கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், அவர்களிடம் சென்று கோயில் வளாகத்தில் தங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்றும், தாங்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

அதனையும் மீறி அவர்கள் அவ்விடத்தை விட்டுச் செல்லாமல் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வாக்குவாதம் முற்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷை சராமாரியாக தாக்கி இரும்பு கம்பியால் தலையில் அடித்துள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்து தலையிலிருந்து அதிக ரத்தம் வெளியேறவே அக்கம்பக்கத்தினர் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் மற்றும் திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர், காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்தனர்.

பின் காவல் ஆய்வாளர் ரமேஷை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரேணிகுண்டா பகுதியில் இருந்து வந்த ஜெயச்சந்திரன் (32), புருஷோத்தமன் (25), வெங்கடாசலம் (44), ரமேஷ் (20), உதயகுமார் (21), முரளி (30), வெங்கடேஷ் (19), முனிராஜுலு (44) ஆகிய 8 பேரையும் கைது செய்து திருத்தணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்

மேலும், இவர்கள் மீது ஆறு பிரிவுகளுக்கு மேல் கொலை முயற்சி போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில், திருத்தணி நீதிபதி முன்பு ஆஜர் செய்து இவர்களை சிறையில் அடைத்தனர். காவல் துறையினரை தாக்கிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருட்டு வழக்கில் கைதான பழங்குடியின இளைஞர் உயிரிழப்பு... 5 போலீசார் பணி இடைநீக்கம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.