பெட்ரோலுடன் நீர் கலந்து விற்பனை: திருவள்ளூரில் பரபரப்பு

author img

By

Published : Nov 30, 2021, 1:46 PM IST

இருசக்கர வாகன ஓட்டிகள்

திருவள்ளூரில் பெட்ரோலுடன் நீர் கலந்துவந்ததாகப் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள், காரில் பெட்ரோல் போட்டவர்கள் தனியார் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்குள்பட்ட ஆயில் மில் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கிவருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை (நவம்பர் 29) 4 மணி அளவில் தனியார் நிறுவன ஊழியர் சங்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் வாகனத்தில் அடைப்பு ஏற்பட்டு வாகனம் பழுதடைந்து நின்றது. இதையடுத்து ஒரு மெக்கானிக் கடையில் சென்று வாகனத்தைப் பரிசோதித்தபோது இன்ஜினில் நீர் இறங்கியுள்ளது எனக் கூறியுள்ளார். நீர் இறங்கிய காரணம் குறித்து ஆராய்ந்தபோது பெட்ரோலில் நீர் கலந்திருப்பது தெரியவந்தது.

பெட்ரோலா... நீரா?

இந்த நிலையில் அந்த வாகன உரிமையாளர் பெட்ரோல் பங்கிற்கு சுமார் ஒருமணி நேரம் கழித்துச் சென்று கேட்டுள்ளார். அதேபோல் வேறு ஒருவர் அதே பங்கில் காரில் பெட்ரோல் போட்டுவிட்டு 2 கி.மீட்டர் தூரம் வரை சென்றபோது கார் பழுதடைந்து நின்றுள்ளது.

புதிதாக வாங்கிய காரில் பழுதா என நினைத்து மெக்கானிக்கிடம் காண்பித்தபோது நீர் கலந்த பெட்ரோல் போட்டதால் வண்டி பழுதடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலுடன் நீர் கலந்து விற்பனை

இதனையடுத்து பலர் தங்களது வாகனம் பழுது ஏற்பட்டுள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் காவல் துறையினர் அங்கு வந்து ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களைச் சமாதானம் செய்தனர்.

பின்னர் இது குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகிகளிடம் காவல் துறையினர் கேட்டபோது சென்னையிலிருந்து வந்த பெட்ரோல் இதுபோல் நீர் கலந்துவந்ததாகவும், அதனால் 5 மணியளவில் பெட்ரோல் போடுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் சென்னையிலும் மழை காரணமாக இதுபோல் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டுவருவதாகவும் கூறினார்.

மழைநீரால் இந்தப் பிரச்சினையா?

இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டதால் வாகனங்கள் பழுதானது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் வாகனத்தைச் சரிசெய்து தருகிறோம் என்றும் தெரிவித்தனர். தங்களது வாகனத்திற்கு உரிய இழப்பீடு பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் வழங்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர்.

இதனால் பெட்ரோல் பங்க் அருகே பரபரப்பு ஏற்பட்டது. நீர் கலந்த பெட்ரோலை பயனாளிகளுக்குப் போட்டதைப் பெரிதாக நினைக்காமல், மொத்தமாக விநியோகம் செய்தபோதே நீர் கலந்துவந்ததாகவும், அதைச் சிறிது நேரத்தில் நிறுத்திவிட்டோம் என பங்கின் மேலாளர் குருமூர்த்தி சாதாரணமாகச் சொன்னதால் வாக்குவாதம் மேலும் முற்றியது.

காவல் துறையில் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து பங்கை மூடி பெட்ரோல் போடுவதை நிறுத்தினர். அதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பரபரப்பாகக் காணப்பட்டது.

இதையும் படிங்க: Mini Bus Service: சிற்றுந்து சேவையைத் தொடங்கிவைத்த ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.