உயிரைத் தந்து தமிழ்த்தாயை காத்தவர்கள் நாங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Jan 25, 2023, 11:10 PM IST

Updated : Jan 26, 2023, 6:49 AM IST

Etv Bharat

திருவள்ளூர் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தமிழை இந்திய ஆட்சி மொழியாக்க வேண்டும், உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

உயிரைத் தந்து தமிழ் தாயைக் காத்தவர்கள் நாங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

திருவள்ளூர்: மொழிப்போர் தியாகிகளை நினைவு கூரும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இதில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ் உணர்வாளர்கள் பலரும் எழுதியும் பேசியும் எழுதியும் இந்தி திணிப்பின் ஆபத்தை மக்களுக்கு விளக்கினர். இதையெல்லாம் உள்வாங்கி இருப்பது ஓர் உயிர், அது போகப்போவது ஒரு முறை, ஒரு நல்ல காரியத்திற்காக நாட்டுக்காக போராடி வாழ்ந்து தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்.

கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, பீளமேடு தண்டபாணி, கீரனூர் முத்து, சண்முகம் போன்றவர்கள் தியாகங்களை போற்றுவதற்காக ஆண்டு தோறும் ஜனவரி 25ஆம் நாள் மொழி போர் தியாகிகள் நாளாக நாம் கடைபிடிக்கிறோம்.

முதல் தியாகி சின்னசாமி மொழிக்காக உயிரைக் கொடுத்தவர், 1964அன்று தீக்குளித்து உயிரிழந்தார். மொழிப்போர் தியாகி இன்றைக்கும் சிவலிங்கம் பெயரில் ஒரு தெரு இருக்கிறது. மொழிப்போர் தியாகி அரங்கநாதன் பெயரில் சென்னையில் பாலம் இருக்கிறது. மொழிப்போர் தியாகிகள் நினைவாக நூலகம், பாலம், சாலை அவர்களது பெயரால் அமைக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் திராவிட இயக்கத்தின் வரலாறு. உயிரைத் தந்து தமிழ் தாயை காத்தவர்கள் நாங்கள். நன்றி உணர்வோடு இன்று அவர்களை நினைத்துப் பார்க்கிறோம். அவர்களது தியாகத்திற்கு தலை வணங்குகிறோம். யாரால் ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்தவர்கள் அல்ல. மொழிப்போர் தியாகிகளின் தியாகம் வீண் போகவில்லை. பள்ளி முதல் உயர் கல்வி வரை தமிழில் படிக்கும் நிலை இங்கு உள்ளது.

உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வர இருமொழிக் கொள்கைதான் தான் காரணம். பாஜக அரசு இந்தி மொழி திணிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரு உணவு, ஒரே பண்பாடு, என ஒரே வரிசையில் மொழியை அழிக்க பார்க்கிறார்கள். இந்தியாவை இந்தி மொழியாக்க முயல்கிறது. தமிழ் மொழி உணர்வாய் உயிராய் இருக்கிறது. மொழி போராட்டம் மட்டுமின்றி தமிழ் மொழியை, தமிழை காக்கின்ற போராட்டமாக இது தொடரும். இந்த கூட்டத்திலும் நான் உறுதியாக இருக்கிறேன், உறுதியாக நாம் இருப்போம். இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிரான நமது போராட்டம் எப்போதும் தொடரும்.

திருவள்ளூர் மாவட்டம், ஏரிகள் நிறைந்த மாவட்டம். திராவிட இயக்கத்தின் தோற்றத்தின் மூவர்களில் ஒருவரான நடேசன் சின்னக்காவனத்தில் பிறந்த ஊர். திராவிட இல்லத்தை உருவாக்கிய நடேசன் பிறந்த ஊர், சின்ன பொன்னேரி. தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதி கட்சி, திராவிட இயக்கம் உருவாக காரணமான இந்த மண்ணில் மொழிப்போர் தியாகி கூட்டம் எழுச்சியோடு நடைபெறுகிறது.

இந்தியை ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, அதிகாரம் செலுத்தும் மொழியாக மாற்ற பாஜக அரசு முயற்சித்து கொண்டிருக்கிறது. மேல் ஆதிக்கம் செலுத்தும் மொழியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தை அகற்றப் பார்க்கிறார்கள். இந்திக்கு அந்த இடத்தை தாரை வார்க்கிறார்கள். தமிழும் ஆங்கிலமும் இரு மொழி கொள்கை தான் தமிழ்நாட்டிற்கு.

தமிழ் மொழி இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக வேண்டும். அனைத்து அலுவலக செயல்பாடுகளும் தமிழிலேயே இருக்க திருத்தம் செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும். இதுவே தங்களின் கொள்கை” எனப் பேசினார்.

இதையும் படிங்க: தமிழ்மொழிக்காக எதையும் செய்யாத திமுக - செல்லூர் ராஜு

Last Updated :Jan 26, 2023, 6:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.