ஆலங்குளத்தில் நிற்கும் ஹரி நாடார் : யார் இந்த நடமாடும் நகைக்கடை?

author img

By

Published : Mar 18, 2021, 12:13 PM IST

Updated : Mar 19, 2021, 10:58 PM IST

ஹரிநாடார்

கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் யார்? நான்கரை கிலோ தங்க நகைகளுடன் வலம் வரும் ஹரி நாடாரின் தொழில் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்வோம்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு, கிராமத்தில் இருந்து சென்னையில் குடியேறிய ஆயிரக்கணக்கானோரில் ஒருவர்தான், இந்த ஹரி நாடார்.

தற்போதைய தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள மேல இலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர், ஹரி நாடார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்குச் சென்றுள்ளார். அப்போது தனியார் பேருந்துகளில் ஆள் சேர்த்து கொடுக்கும் பயணச்சீட்டு முகவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

பின்னர் பேருந்தில் வரும் பல்வேறு வியாபாரிகளின் அறிமுகம் மூலம் ஹரி நாடார் பைனான்ஸ் தொழிலில் இறங்கியுள்ளார். அதில் அதிக லாபம் கிடைக்கவே பெரும் தொழில் அதிபர்கள் மற்றும் விஐபிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். குறிப்பாக, தற்போது சினிமா துறையில் உள்ள பிரபல தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் கொடுத்து வருகிறார்.

இதுபோன்று பைனான்ஸ் தொழிலில் ஆர்வம் காட்டி வந்த ஹரி நாடார், அனைவராலும் அறியப்படும் அளவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். அதற்குத் தனது சாதிப்பாசத்தைக் கையில் எடுத்த ஹரி நாடார், கடந்த 2009ஆம் ஆண்டு தென்மாவட்டங்களில் பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய நாடார் சமுதாய பிரமுகரான ராக்கெட் ராஜா உடன் அறிமுகமாகியுள்ளார்.

இந்தச் சூழலில்தான் கடந்த 2009ஆம் ஆண்டு ராக்கெட் ராஜா "நாடார் மக்கள் சக்தி இயக்கம்'' என்ற அமைப்பை உருவாக்கினார். இதையறிந்த ஹரி நாடார், இவ்வமைப்பில் ஒருங்கிணைப்பாளராக தன்னையும் இணைத்துக்கொண்டார். அன்றிலிருந்து தொடர்ந்து ராக்கெட் ராஜாவுடன் சேர்ந்து நாடார் சமுதாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிகளை எடுத்து வருகிறார்.

குறிப்பாக, நாடார் சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், தனது ஆதரவாளர் உடன் நேரில் சென்று காவலனாக இருந்தார். அதிமுக முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பாவுக்கும், திமுக எம்.பி., திருச்சி சிவாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது சாதி அடிப்படையில் சசிகலா புஷ்பாவுக்கு ஹரி நாடார் பக்கபலமாக இருந்து வந்தார்.

சமூகத்தில் பெயர் எடுக்க வெறும் சமுதாய அமைப்பு மட்டும் போதாது என்பதை நன்கு உணர்ந்த ஹரி நாடார், வித்தியாசமான நடவடிக்கைகள் மூலம் கவனத்தை ஈர்க்க முடிவு செய்தார். அதன்படி சிறுவயது முதலே அவருக்கு தங்க நகைகள் மீது அதிக ஈர்ப்பு இருந்துள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில் கழுத்து நிறைய தங்க நகைகளை அணியத்தொடங்கினார். போகப்போக தனது வருமானத்திற்கு ஏற்ப அணியும் நகைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் கிலோ கணக்கில் தங்க நகைகள் அணிந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க செய்த, மெல்லிய உடல் அமைப்பு கொண்ட ஹரி நாடார், நகைகளை மட்டும் வித்தியாசமாக அணியாமல் தலைமுடியையும் வித்தியாசமான முறையில் நீளமாக வளர்த்தார். ஆண்களில் வழக்கத்திற்கு மாறான அதிக தலைமுடி, அதிக நகைகள் கொண்ட தோற்றம் என்பதால் ஒருவித அவமரியாதைக்கும் ஆளானார். இருப்பினும், தனது விருப்பத்திற்கு ஏற்ப தொடர்ந்து, புதுப்புது தங்க நகைகளை வாங்கி அணிந்து வந்தார். தற்போது அவர் கழுத்து கைகளில் மொத்தம் சுமார் நான்கரை கிலோ தங்க நகைகள் அணிந்துள்ளார்.

ஹரி நாடார் வேட்புமனு தாக்கல்: யார் இந்த நடமாடும் நகைக்கடை?
சமீபத்தில் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் சென்றபோது விமான நிலைய அதிகாரிகள் ஹரி நாடார் கழுத்தில் கிடந்த நகைகளைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும், வருமான வரித்துறைக்கும் தகவல் அளித்தனர். அதனால், திருவனந்தபுரத்தில் அவர் இறங்கியவுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர். ஏன் வருமான வரி செலுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். தான், அணிந்துள்ள ஒவ்வொரு நகைக்கும் உரிய ஆவணங்களை ஹரிநாடார் காட்டினாலும், வருமான வரியாக ஒன்றரை கோடி ரூபாய் செலுத்திய பின்னரே விடுவிக்கப்பட்டார்.நாடார் சமுதாய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் நாடார் மக்கள் சக்தி இயக்கம் தொடர்பான நிகழ்ச்சிகளில் நகைகளுடன் வலம் வந்தார். மேலும் எப்போதும் தனக்கு பின்னால் இளைஞர்கள் பட்டாளத்தைக் கையில் வைத்துக்கொண்டு, தான் செல்லும் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். அவ்வப்போது ஊடகங்களிலும் தலை காட்டத்தொடங்கினார்.

இதனால் யார் இந்த ஹரி நாடார் என்று பேசும் அளவுக்கு மக்கள் மத்தியில் இடம்பிடித்தார். இதுபோன்ற சூழலில் தான் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'நாடார் மக்கள் சக்தி' இயக்கத்தை 'பனங்காட்டுப் படை கட்சி' என்று பெயர் மாற்றினர். பெயர் மாற்றிய கையோடு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில், 'பனங்காட்டுப் படை கட்சி’ சார்பில் போட்டியிட்டு 4 ஆயிரத்து 243 வாக்குகள் பெற்று, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அதாவது 2019 மக்களவைத் தேர்தலில், மூன்றாவது பெரிய கட்சியாக அறியப்பட்ட 'நாம் தமிழர் கட்சி' வேட்பாளர் 'ராஜ நாராயணனை' விட 749 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

முதல்தேர்தலிலேயே தனது சமுதாய மக்களின் ஆதரவைக் கண்டு வியந்த அவர் தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், நெல்லை மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆரம்பம் முதலே முனைப்புக்காட்டி வந்தார். ஆலங்குளம் தொகுதியில் நாடார் சமுதாய மக்கள் பெரும்பாலும் வசித்து வருகின்றனர். எனவே, தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே ஆலங்குளம் பகுதிக்கு அவ்வப்போது சென்று பொதுமக்களை சந்தித்து வந்தார். திட்டமிட்டபடி தற்போது ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில், 'பனங்காட்டுப் படை கட்சி' சார்பில் போட்டியிட ஹரி நாடார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கையில் சின்ன மோதிரம் அணிந்தாலே, பெரிய பணக்காரராக இருப்பார் போல, இவருக்கு ஓட்டு போட்டால் கையில் பிடிக்க முடியாது என்று மக்கள் யோசிப்பார்கள் என்பதற்காக, நகைகளை அணிந்து செல்லத் தயங்கும் வேட்பாளர்களுக்கு மத்தியில், நான்கரை கிலோ தங்க நகைகளுடன் ஜாகுவார், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற விலையுயர்ந்த கார்களில் ஹரி நாடார் அவ்வப்போது ஆலங்குளம் தொகுதியில் வலம் வருகிறார்.

இதற்கிடையில் பனங்காட்டுப்படை கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 51 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் 44 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், கேரளாவில் இரண்டு தொகுதிகளிலும், பாண்டிச்சேரியில் 5 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக பனங்காட்டுப் படை கட்சி அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த 51 தொகுதிகளிலும், நாடார் சமுதாய மக்கள் பெருமளவு வசித்து வந்ததால், அங்கு போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஹரி நாடாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'ஆரம்பத்தில் நாடார் மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பை ராக்கெட் ராஜா தொடங்கினார். அவருடன் இணைந்து கட்சியில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினேன். பிறகு எங்களுக்கு அரசியல் அங்கீகாரம் வேண்டும் என்பதற்காக, நாடார் மக்கள் சக்தி இயக்கத்தை பனங்காட்டுப் படை கட்சி என்று மாற்றி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தோம். தற்போது பனங்காட்டுப் படை கட்சி மூன்று மாநிலங்களில் சேர்த்து மொத்தம் 51 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. இந்தத் தேர்தலில் நிச்சயம் எங்கள் சமுதாய மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்று தெரிவித்தார்.
பனங்காட்டுப் படை கட்சியின் தலைவராக ராக்கெட் ராஜா செயல்பட்டு வந்தாலும், கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலும் பெரும்பாலும் ஹரி நாடாரே ஈடுபடுகிறார். அதாவது ராக்கெட் ராஜா மீது பல்வேறு முக்கிய வழக்குகள் இருப்பதால், அவர் பெரும்பாலும் வெளியில் வருவதில்லை. அதன் காரணமாக முழுக்க முழுக்க ஹரி நாடார் தான் கட்சியை வழி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெருந்தலைவர் காமராஜர் பெயர் பலகை இருட்டடிப்பு: ஹரி நாடார் ஆவேசம்

Last Updated :Mar 19, 2021, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.