ETV Bharat / state

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

author img

By

Published : Nov 18, 2021, 8:18 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திலிருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் பிரத்யேக காட்சி
சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் பிரத்யேக காட்சி

திருவள்ளூர்: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து ஒரே நாளில் தலா 2,500 கன அடியிலிருந்து மூன்றாயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், சோழவரம் ,செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வடகிழக்குப் பருவமழை கடந்த 27ஆம் தேதி தொடங்கிய நிலையில் திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஐந்து ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து பிரத்யேகக் காட்சி

இதனால் கடந்த 7ஆம் தேதி முதல் ஐந்து ஏரிகளும் நிரம்பியதால் உபரிநீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி மழை சற்று ஓய்ந்த நிலையில் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்தது. இதனால் தொடர்ந்து உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நேற்றும் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. திருவள்ளூர் ஏரிகளின் பாதுகாப்பு கருதி மூன்று அடி வரை தண்ணீர் இருப்பு குறைக்க திட்டமிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணி அளவில் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரியில் தலா ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று காலை ஆறு மணி அளவில் ஆயிரத்து 500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

தொடர்ந்து பிற்பகல் 12 மணியளவில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தலா இரண்டாயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று மழை அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து கொண்டிருப்பதால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திலிருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் மூன்றாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இரண்டாயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளில் சுமார் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் ஆற்றில் குளிக்க, வேடிக்கை பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி - கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் மூடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.